உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சந்திரனுக்கே பாவ விமோசனம் தீர்த்த சந்திரபுஷ்கரணி தீர்த்தம்

சந்திரனுக்கே பாவ விமோசனம் தீர்த்த சந்திரபுஷ்கரணி தீர்த்தம்

புராணத்தில் சிவபெருமானின் மாமனாரான தச்சன்  தனது பெண் பிள்ளைகளை ( நட்சத்திரங்களாக கருதப்படும்) அஸ்வினி, பரணி, கார்த்திகை,ரோகிணி உள்பட அனைத்து பிள்ளைகளையும் சந்திரனுக்கு திருமணம் செய்து வைத்திருக்கிறார்.இதில் சந்திரன் 4 வது நட்சத்திரமான ரோகிணியிடம் மட்டும் நெருக்கமாக இருந்துள்ளார். இதனை மற்ற நட்சத்திரங்கள் எங்களிடம் சந்திரன் நெருங்குவதே கிடையாது என தனது தந்தை தச்சனிடம்  கூறியுள்ளனர். பிறகு தச்சன் சந்திரனுக்கு அறிவுரை கூறியுள்ளார், அவர் மீண்டும் முன்பு இருந்ததை போலவே இருந்துள்ளார். இதனால் கோபமடைந்த தச்சன் சந்திரனிடம் சென்று உன் உடம்பில் தீராத தொழுநோய்கள்,குஷ்டங்கள் வந்து கஷ்டப்படுவாயாக! என்று சாபமிட்டுள்ளார்.

அவர் சாபமிட்டவுடன் சந்திரனின் உடம்பில் தொழுநோய் வந்ததாக கூறப்படுகிறது. பின்னர் சந்திரன் தனது சாபத்தை போக்க சிவபெருமானிடம் சென்று முறையிட்டுள்ளார்.அதற்கு அவர் வில்வவனசேத்திரம் என்ற ஊர் ஒன்று இருக்கிறது. அங்கு நான் சுயம்புலிங்கமாக வில்வவனத்தில் முளைத்திருக்கிறேன். அங்கு சென்று எனக்கு கோயில் கட்டி எதிரே ஒரு தெப்பக்குளம் வெட்டி அதில் குளித்து வந்தால் இந்த சாபம் போய் விடும் என்று கூறியுள்ளார். சந்திரன் வில்வவனசேத்திரம் என்று அழைக்கப்படும் மானாமதுரைக்கு வந்து கோயில் கட்டி அதற்கு ஆனந்தவல்லி சோமநாதர் கோயில் என பெயரிட்டு எதற்கு எதிரே தெப்பக்குளம் வெட்டி அதில் குளித்து வந்ததால் அவரது உடம்பில் இருந்த தொழுநோய் நீங்கி சாபவிமோட்சனம் பெற்றதாக கூறப்படுகிறது. அதனால் அந்த தெப்பகுளத்திற்கு சந்திரபுஷ்கரணி தீர்த்தம் என்று பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை வில்வவன சேத்திர புராணம் என்ற புத்தகத்தில் 1881 ம் ஆண்டு படித்த ஆங்கிலேயர் ஒருவர் வில்வவனசேத்திரம் என்று அழைக்கப்படும் மானாமதுரையில் தொழுநோய் மருத்துவமனை ஆரம்பித்ததாக கூறப்படுகிறது.  இன்றும் மானாமதுரை தயாபுரத்தில் அந்த தொழுநோய் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இன்றளவும் ஏராளமானோர் பல்வேறு மாவட்டங்களில் இருந்து இந்த மருத்துவமனைக்கு வந்து  சிகிச்சை பெற்று செல்கின்றனர்.வரலாற்றில் இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த சந்திரபுஷ்கரணி தீர்த்தம் தற்போது ஒரு சின்ன கிணறாக துார்ந்து போய் காட்சி அளிக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !