உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சித்ரா பவுர்ணமி கோலாகலம்: சிவாலயங்களில் பக்தர்கள் வழிபாடு

சித்ரா பவுர்ணமி கோலாகலம்: சிவாலயங்களில் பக்தர்கள் வழிபாடு

சேலம்: சேலம் மாவட்டம் முழுவதும் சித்ரா பவுர்ணமி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சித்ரா பவுர்ணமியொட்டி, சேலம், பழைய பஸ் ஸ்டாண்ட், சுகவனேஸ்வரர் கோவிலில், நேற்று, சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து, சுகவனேஸ்வரர், சொர்ணாம்பிகை அம்மனுக்கு, விசேஷ அலங்காரம் சாத்துபடி செய்யப்பட்டது. ரிஷப வாகனத்தில், சுவாமி திருவீதி உலா வந்தார். தேர்வீதி, முதல் அக்ரஹாரம், பட்டைக்கோவில், சின்னக்கடை வீதி வழியாக, மீண்டும் கோவிலை அடைந்தது. வழிநெடுகிலும், ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.

திருக்கல்யாணம் கோலாகலம்: சித்ரா பவுர்ணமி உற்சவ விழாக்குழு சார்பில், இளம்பிள்ளை ஏரி எதிரேவுள்ள, ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில், திருக்கல்யாண உற்சவம் நேற்று காலை நடந்தது. ஏராளமான பக்தர்கள், சீர்வரிசை தட்டுகளுடன், கோவிலுக்கு ஊர்வலம் வந்தனர். தொடர்ந்து, யாக பூஜை செய்து, சிறுமியை சவுடேஸ்வரி அம்மனாக பாவித்து, அவர் கையால், ராமலிங்கேஸ்வரர் மற்றும் சவுடேஸ்வரி அம்மனுக்கு மாலை மாற்றும் வைபவம் நடத்தி, திருமாங்கல்யம் அணிவித்து, சிவாச்சாரியார்கள், கல்யாணம் நடத்திவைத்தனர். மதியம், உலக நன்மை வேண்டி நடந்த திருவிளக்கு பூஜையில், ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். மாலை, ரிஷப வாகனத்தில் சவுடேஸ்வரி அம்மன் சமேத ராமலிங்கேஸ்வரர் தம்பதி சமேதரராய் எழுந்தருளி, திருவீதி உலா வந்தனர். அதேபோல், இளம்பிள்ளை, மோட்டூர் காளியம்மன், புது ரூபாய் நோட்டுகள் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். மேலும், சேலம், இரண்டாவது அக்ரஹாரம் காசி விஸ்வநாதர், குகை அம்பலவாணர், செவ்வாய்ப்பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர், ஓமலூர் அண்ணாமலையார், காசிவிஸ்வநாதர், வைதீஸ்வரன் கோவில் என, மாவட்டம் முழுவதுமுள்ள சிவாலயங்களில், சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள், சுவாமியை தரிசித்தனர்.

* சங்ககிரி, சோமேஸ்வரர் மற்றும் சென்னகேசவ பெருமாள் கோவில், சித்திரை திருவிழா தேரோட்டத்தை, ஆர்.டி.ஓ., ராமதுரைமுருகன் தொடங்கிவைத்தார். ஏராளமான பக்தர்கள், வடம்பிடித்து தேரை இழுத்தனர். மலையடிவாரம், முஸ்லிம் தெரு வழியாக சென்ற தேர், நிலை பெயர்ந்த இடத்தை அடைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !