இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே....
படுத்த படுக்கையாக இருந்த முதியவரின் முகத்தில் அப்படி ஒரு பிரகாசம் தெரிந்தது. அவரைப் பார்த்த தூரத்து உறவினர் ஒருவர் கேட்டார், “உங்களுக்கு எத்தனை வயதாகிறது ஐயா?” சிரித்த முகத்துடன் முதியவர் சொன்னார், “எண்பது என்னும் இனிய பகுதியில் இருக்கிறேன்.” “எண்பது உங்களுக்கு இனிமையாகத் தெரிகிறதா! நோய் வாய்ப்பட்டு நடக்க முடியாமல் தவிக்கிறீர்கள்... இதை எப்படி இனிமை என்கிறீர்கள்?” இப்போது வாய்விட்டு சிரித்தபடியே பதில் சொன்னார் முதியவர், “வயது ஆக ஆக என் கால்கள் தள்ளாடுவது உண்மையே. கண்கள் கூட மங்கிவிட்டன. மொத்த உடல் பலமும் குறைந்து விட்டது. என்றாலும், வாழ்வில் இனிமையான காலம் நெருங்குவதாகவே உணர்கிறேன். என்னை நேசிக்கிற என் ஆண்டவரை காணும் நாள் நெருங்குவதை எண்ணி, ஆனந்தமாக இருக்கிறேன். தேவ தூதர்களையும் நான் சந்திக்க தயாராகி விட்டேன். இந்த நினைவே என் மனதை இனிமையாக்குகிறது,” என்றார். உடலுக்கு எத்தனை வயதானாலும், பண்பட்ட மனம் இருந்தால் போதும். இன்பம் பொங்கும் வெண்ணிலாவால் வாழ்வு இனிமை யாக அமையும்.