அனுமந் வாகனத்தில் கரிகிருஷ்ண பெருமாள் வீதிஉலா
பொன்னேரி: பிரம்மோற்சவத்தினை முன்னிட்டு, அனுமந் வாகனத்தில், கரிகிருஷ்ண பெருமாள் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பொன்னேரி, திருவாயற்பாடி, சவுந்தர்யவல்லி சமேத கரிகிருஷ்ண பெருமாள் கோவில் பிரம்மோற்சவம், கடந்த மாதம், 27ம் தேதி துவங்கியது. மாடவீதி உலா தொடர்ந்து, கொடியேற்றம், சந்திரபிரபை, சூர்யபிரபை உள்ளிட்ட உற்சவங்கள் நடைபெற்றன. விழாவின், ஐந்தாம் நாளான நேற்று, அனுமந் வாகனத்தில் பெருமாள் வீதிஉலா நடந்தது. காலை, 10:00 மணிக்கு, கோவில் பிரகாரத்தில் இருந்து உற்சவ பெருமானுடன் புறப்பட்ட அனுமந் வாகனம், பெரிய மாடவீதிகள் வழியாக சென்றது.
கருடோற்சவம்: வழிநெடுகிலும் பக்தர்கள் தீபாராதனை காட்டி, பெருமாளை வழிபட்டு சென்றனர். பிரம்மோற்சவத்தினை முன்னிட்டு, கரிகிருஷ்ண பெருமாள் கோவிலில், தினமும், சிறப்பு அபிஷேக தீபாராதனைகள் நடைபெற்று வருகின்றன. இன்று, காலை, சேஷ வாகனமும், இரவு அன்ன வாகனமும், நாளை, நள்ளிரவு, 1:00 மணிக்கு கருடோற்சவம் மற்றும் அரியும் அரனும் சந்திக்கும் சந்திப்பு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.