கந்த துணி மாரியம்மன் கோவில் திருவிழா
ஆர்.கே.பேட்டை: கந்த துணி மாரியம்மன் மற்றும் கொள்ளாபுரியம்மன் கோவிலில், நேற்று, ஜாத்திரை திருவிழா நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். ஆர்.கே.பேட்டை அடுத்த, அம்மனேரி கிராமத்தின் தென்கிழக்கில், வயல்வெளியில் அமைந்துள்ளது கந்த துணி மாரியம்மன் மற்றும் கொள்ளாபுரியம்மன் கோவில். இந்த கோவிலில், சித்திரையில், ஜாத்திரை கொண்டாடப்படுவது வழக்கம். நேற்று காலை, ஜாத்திரை திருவிழா கோலாகலமாக நடந்தது. கிராமத்தின் நடுவே உள்ள விநாயகர் கோவில் மற்றும் மலையடிவாரத்தில் உள்ள சக்தியம்மன் கோவில் மற்றும் கந்ததுணி மாரியம்மன், கொள்ளாபுரியம்மன் கோவில்கள், வேப்பிலை தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. காலை, 10:00 மணிக்கு, திரளான பக்தர்கள் கஞ்சி கலயங்களை சுமந்தபடி ஊரவலமாக சென்று, கந்ததுணி மாரியம்மன் மற்றும் கொள்ளாபுரியம்மனுக்கு படைத்தனர். மாலை, 6:00 மணிக்கு. சிறப்பு பூஜைகள் நடந்தன. இரவு, 7:00 மணிக்கு, அம்மன் வீதியுலா எழுந்தருளினார். ஜாத்திரை திருவிழாவையொட்டி, திரளான பக்தர்கள், விரதம் மேற்கொண்டு அம்மனை தரிசித்தனர்.