பரமக்குடியில் கள்ளழகர் கோயிலுக்கு திரும்பினார்
பரமக்குடி:பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயில் சித்திரைத் திருவிழாவில், நேற்று பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்துடன், பக்தர்களின் கோவிந்தா கோஷம் விண்ணதிர கோயிலுக்கு திரும்பினார். ஏப். 30 ல் அதிகாலை 3:55 மணிக்கு பூப்பல்லக்கில் வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர், காலை 9:10 மணிக்கு குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து சேஷ வாகனத்தில் எழுந்தருளி மண்டூக மகரிஷிக்கு சாபவிமோசனமும், விடிய, விடிய தசாவதார கோலத்தில் அருள்பாலித்தார். பின்னர் கருட வாகனம், பட்டுப்பல்லக்கில் ராஜ அலங்காரத்தில் வலம் வந்த பெருமாள், நேற்று கோடாரி கொண்டையிட்டு, தங்க நெல் மணி தோரணம் சூடி, காட்சியளித்தார். வெட்டிவேர், மல்லிகை, கனகாம்பர பந்தலிட்ட பூப்பல்லக்கில் காலை 8:00 மணிக்கு வைகை ஆற்றில் இருந்து புறப்பட்டார். மாலை 6:00 மணி வரை முக்கிய வீதிகளில் உலா வந்த அழகர், கருப்பண்ணசாமியிடம் உத்தரவு பெற்று சிறப்பு தீபாராதனைகளுடன் மீண்டும் கோவிலுக்கு திரும்பினார். இரவு கண்ணாடி சேவை நடந்தது. ஏற்பாடுகளை தேவஸ்தான டிரஸ்டிகள் செய்திருந்தனர்.