மாசிலாமணீஸ்வரர் கோவிலில் மே 7ல் நிஜரூப தரிசனம்
திருமுல்லைவாயல் மாசிலாமணீஸ்வரர் கோவிலில், ஆண்டிற்கு ஒருமுறை மூலவர் லிங்கத்தில் இருந்து, சந்தனம் களைந்து, நிஜரூப தரிசன நிகழ்வு, மே.,7ம் தேதி நடக்கிறது. முல்லை வனம் எனப்படும், திருமுல்லைவாயலில் அமைந்துள்ளது, மாசிலாமணீஸ்வரர் - கொடியிடை நாயகி அம்மன் கோவில். இக்கோவில் தலை விருட்சம், முல்லை. கல்யாண தீர்த்தமும் உள்ளது. இக்கோவிலில், சுவாமி சன்னதியின் முன் உள்ள, வெள்ளெருக்குத் துாண்கள் வேறு எங்கும் காண முடியாது.
சந்தன காப்பு: அரசன் தொண்டமான், முல்லை வனம் பகுதிக்கு வந்தபோது, முல்லைக் கொடியில், யானையின் கால்கள் சிக்கின. தன் வாளால், முல்லை கொடி புதரை வெட்டியபோது, அதிலிருந்து ரத்தம் பீறிட்டது. புதரை விலக்கி பார்த்தபோது, அங்கிருந்த, சிவலிங்கத்தில் இருந்து ரத்தம் வழிவதை பார்த்து, அரசன் அதிர்ந்தான். அதே வாளால், தன்னை மாய்த்துக் கொள்ள முயன்ற போது, அவன் முன், சிவபெருமான் தோன்றி காட்சியளித்தார். வாளால் வெட்டுபட்ட சிவலிங்கமே, அக்கோவில் மூலவர் சன்னியில் உள்ளது. வெட்டப்பட்ட இடத்தில், எப்போதும் சந்தனம் சார்த்தப்பட்டிருக்கும். எனவே, மூலவருக்கு, அபிஷேகம் நடத்தப்படுவதில்லை. ஆவுடையாருக்கு மட்டும் தான், அபிஷேக காலத்தில், வென்நீரில் அபிஷேகம் செய்யப்படுகிறது. சித்திரை, சதயம் அன்று, இந்த சம்பவம் நிகழ்ந்ததால், ஒவ்வொரு ஆண்டும், சித்திரை சதயத்தில், மூலவர் லிங்கத்தில் உள்ள, சந்தனக் காப்பு களையப்பட்டு, மீண்டும் சார்த்தப்படுகிறது.
நிஜரூப தரிசனம்: அடுத்த சித்திரை சதயம் வரும் வரை, அந்த சந்தனம், சுவாமி மீது அப்படியே இருக்கும். அபிஷேக காலங்களில், சந்த னத்தின் மீதே சந்தனம் சார்த்தப்படுகிறது. ஆண்டிற்கு ஒருமுறை கிடைக்கும், இந்த அரிய நிகழ்வு, மே7ம் தேதி நடக்கிறது. அன்று, கடந்த ஆண்டு சார்த்தப்பட்ட சந்தனக் காப்பு களையப்படுகிறது. மே 9ம் தேதி, காலை, 10:00 மணிக்கு, சித்திரை, சதயம் நட்சத்திரத்தில் சந்தனக்காப்பு நடக்கிறது. இடைப்பட்ட நாளில், பக்தர்கள் நிஜரூப தரிசனம் காணலாம். - நமது நிருபர் -