தொல்லியல் துறையின் கீழ் திருப்பதி கோவில் நிர்வாகம்?
திருப்பதி : திருமலை திருப்பதி தேவஸ்தான கோவில்களை, தொல்லியல் துறையின் கீழ் கொண்டு வரும் எண்ணத்தை, அந்த துறை அதிகாரிகள் திரும்ப பெற்றுள்ளனர். தொல்லியல் துறை,திருப்பதி கோவில்,நிர்வாகம்? ஆந்திராவில், திருமலை, திருப்பதி தேவஸ்தான கோவில்கள், மிகவும் பழமை வாய்ந்தவை: புராதனமானவை. அவற்றை சரியாக பராமரிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்தது. மேலும், அதன் சொத்து களை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சுரண்டி வருவதாகவும், கணக்கு வழக்குகள் சரியாக பராமரிக்கப்படவில்லை என்றும், மத்திய தொல்லியல் துறைக்கு புகார் எட்டியது. அதனால், தொல்லியல் துறை, திருமலை திருப்பதி தேவஸ்தான கோவில்களை, அதன் கீழ் கொண்டு வர திட்டமிட்டது. அத்துறை சார்ந்த அதிகாரிகள் திருமலைக்கு வந்து ஆய்வு மேற்கொள்ள உள்ளதாகவும், அவர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் தேவஸ்தான செயல் அதிகாரிக்கு, நேற்று முன்தினம் டில்லியைச் சேர்ந்த தொல்லியல் துறை இயக்குனரகத்திடமிருந்து கடிதம் வந்தது.
இதைத் தொடர்ந்து, திருமலையில் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், எங்களின் அனுமதியில்லாமல், டில்லியைச் சேர்ந்த அதிகாரிகள் கடிதம் அனுப்பிவிட்டனர். அதனால், அவர்கள் அளித்த கடிதத்தை திரும்ப பெறுகிறோம் என, விஜயவாடா தொல்லியல் துறை அதிகாரிகள், தேவஸ்தான செயல் அதிகாரிக்கு தொலைபேசி மூலமாக நேற்று தெரிவித்தனர்.