அவிநாசி கோவிலுக்கு மண்டபங்களை ஒப்படைக்க வேண்டும்’
திருப்பூர்:’ஐகோர்ட் தீர்ப்பளித்தபடி, அவிநாசியிலுள்ள இரண்டு மண்டபங்களை, அறநிலையத்துறை வசம் ஒப்படைக்க வேண்டும்,’ என, மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது.பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. டி.ஆர்.ஓ., பிரசன்னா ராமசாமி தலைமை வகித்தார். பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, கோரிக்கை மனுக்களை அளித்தனர். சம்பந்தப்பட்ட துறைகளுக்கு மனுக்கள் அனுப்பப்பட்டு, விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.
அவிநாசி பொதுமக்கள் சார்பில், கொடுத்த மனுவில், ’சென்னை ஐகோர்ட், அவிநாசியில் கோவிலுக்கு சொந்தமான மண்டபங்களை, கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டு மென உத்தரவிட்டுள்ளது. சப்--கலெக்டர் கைய கப்படுத்திய மண்டபங்களை, கோவில்நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளனர்.
காங்கயம் பகுதி மக்கள் கொடுத்த மனுவில், ’காங்கயம் சுற்றுப்பகுதியில் நடக்கும் போராட்டத்தில், பெண்கள், சிறுமிகள் பங்கேற்க கூடாது என்றும். அதுபோன்ற போராட்டத்துக்கு அனுமதி வழங்கமுடியாது எனவும், போலீசார் தெரிவித்துள்ளனர். பெண்களின் நியாயமான போராட்டத்துக்கு அனுமதி வழங்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளனர்.
திருப்பூர், அருள்புரம், நேதாஜி மக்கள் இயக்க தலைவர் முருகதாஸ் கொடுத்த மனுவில், ’கரைப்புதுார் ஊராட்சி, லட்சுமி நகரில், 25 ஆண்டுகளாக மக்கள் வசித்து வருகின்றனர். அனைவருக்கும் பட்டா வழங்க வேண்டும். புதிய ரஷேன் கடைக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும். அங்கன்வாடி மையத்துக்கும், மின் இணைப்பு பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். குப்பையை உடனுக்குடன் அகற்ற வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூரை சேர்ந்த சமூக ஆர்வலர் சிவக்குமார், காளியப்பன் ஆகியோர் கொடுத்த மனுவில், ’விசைத்தறிகளில் உற்பத்தியான துண்டுகளை கைத்தறி ரக ஒதுக்கீடான, பருத்தி பஞ்சு ஈரிழை துண்டு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பதுக்கி வைத்து, கூடுதல் விலைக்கு விற்கின்றனர். மாவட்ட நிர்வாகம், கைத்தறி ரக ஒதுக்கீட்டை, விசைத்தறிகளில் உற்பத்தி செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும்’ என்று தெரிவித்துள்ளனர்.
திருப்பூரில் இயங்கும், ஓம் நமசிவாய அறக்கட்டளை நிர்வாகிகள் கொடுத்த மனுவில், ’கலெக்டர் அலுவலகம் எதிரே, அகற்றப்பட்ட பஸ் ஸ்டாப் நிழற்குடையை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கழிப்பறைகளை, அடிக்கடி சுத்தம் செய்து பராமரிக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.