உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / களைகட்டியது வீரபாண்டி கோயில் சித்திரை திருவிழா

களைகட்டியது வீரபாண்டி கோயில் சித்திரை திருவிழா

தேனி: வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா களை கட்ட துவங்கி உள்ளது. இங்கு குவியும் பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து, அலகு குத்தி  நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். பிரசித்திபெற்ற இக்கோயில் சித்திரை திருவிழாவுக்கு ஏப்.18ல் கொடிக்கம்பம் நடப்பட்டது.  தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது.

மலர் விமானத்தில் அம்மன் ஊருக்குள் இருந்து கோயிலுக்கு வரும் நிகழ்ச்சியுடன் நேற்று  முக்கிய விழா  துவங்கியது. இதனை தொடர்ந்து ஆற்றங்கரையில் வழிபாடு செய்து அக்னி சட்டி, பால்குடம், ஆயிரங்கண்பானைகள் எடுத்து, அலகு குத்தியும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். மாவிளக்கு எடுக்கவும் ஏராளமான பெண்கள் குவிந்தனர்.  இன்று பல்லக்கில் அம்மன் புறப்படும் நிகழ்ச்சி, நாளை பூப்பல்லக்கில்  ஊர்வலம், மே 11ல் தேர் திருவிழா, மே 15ல் ஊர்பொங்கல் நடக்கிறது. தேனி மட்டுமில்லாது பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வருவது வழக்கம். ஆறுநாட்கள் திருவிழாவில் தினமும்  மாவிளக்கு, அக்னிசட்டி உள்ளிட்ட  நேர்த்திக்கடனை பக்தர்கள் செலுத்துவர்.   பொழுதுபோக்கிற்காக ராட்சத  ராட்டினம் அமைக்கப்பட்டு வருகிறது. பாதுகாப்பு கருதி  பக்தர்கள் ஆற்றில் குளிக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கோயில் வளாகம், ஆற்றங்கரை, அக்னிசட்டி எடுக்கும் பாதைகளை துாய்மையாக வைக்க 400 துப்புரவு பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.  கூட்டத்தை கட்டுப்படுத்தவும் பாதுகாப்பு பணியிலும் 600 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பக்தர்கள் கூறுவது என்ன: நம்பிக்கை: சுபத்ரா, கூடலுார்: தொடர்ந்து 7வது ஆண்டாக நேர்த்திக்கடனுக்காக அக்னிசட்டி எடுக்கிறேன். குடும்பத்தினர் 25 நாட்கள் விரதம் இருப்போம். எங்கள் ஊர் காளியம்மன் கோயிலில் அக்னிசட்டி ஏந்தி  தரிசனம் செய்த பின்  இங்கு வருவோம். ஆற்றங்கரையில் வழிபாடு முடித்து அக்னிசட்டியுடன் 400 மீட்டர்  சென்று சட்டியை போடுவோம்.  பிறகு அம்மனை தரிசிப்போம்.  அவ்வாறு செய்தால் மழை பொழிந்து, விவசாயம் செழிக்கும் என்பது எங்கள் நம்பிக்கை. அது நடக்கிறது.

மகிழ்ச்சி: புஷ்பலதா, சின்னமனுார்: நாங்கள் குடும்பத்துடன் திருவிழாவை காண ஒவ்வொரு ஆண்டும் வீரபாண்டிக்கு வருவது வழக்கம்.  உடல்நலக்குறைபாடு சரியாக, தடை நீங்கி திருமணம் நடக்க,  வேலைவாய்ப்பு கிடைக்க, வீடு கட்ட உள்ளிட்ட பல்வேறு வேண்டுதலுக்கு நேர்த்திகடனாக பால்குடம், அக்னிசட்டி எடுக்கின்றனர். பெண்கள் மாவிளக்கு எடுப்பர்.  ஆற்றில் குளிக்கவும், ஏராளமான கடைகள் நிறைந்திருப்பதை ரசிக்கவும், ராட்டினங்களில் விளையாடவும்  இங்கு வருவது மகிழ்ச்சியை  தருகிறது.

அதிகரிப்பு: சம்பத், வியாபாரி, ஈரோடு: வீரபாண்டி திருவிழாவில் 30 ஆண்டாக வளையல், பொட்டு, சிறுவர்களுக்கான விளையாட்டு பொருட்கள் விற்பனை செய்கிறேன்.    ஆண்டுதோறும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது.  என்னிடம் ரூ.10 முதல் ரூ.500 வரையான பொருட்கள் விற்பனைக்கு உள்ளன.  விளையாட்டு பொருட்களை சிறுவர்கள்  அதிகம் விரும்பி வாங்கி செல்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !