மாட்டுப்பொங்கல்: பாலூட்டும் அன்பிலே அன்னை நீயே!
பொங்கலுக்குரிய நேரம் காலைப் பொழுது என்றால், மாட்டுப்பொங்கலுக்கு ஏற்ற நேரம் மாலைநேரம். அதற்கும் காரணம் உண்டு. கண்ணன் காலையில் பசுக்களை ஓட்டிக் கொண்டு பிருந்தாவனத்திற்கு மேய்ச்சலுக்குச் சென்றுவிட்டு, மாலையில் குழலூதியபடியே ஆயர்பாடிக்கு திரும்பி வருவான். அதனால் மாட்டுப்பொங்கலை மாலையில் வைக்கும் வழக்கம் உண்டானது. பசுக்களை நீராட்டி, கொம்புகளில் வர்ணம் தீட்டி அழகுபடுத்துவர். பசுவின் கழுத்தில் மணியும், வேட்டியும் கட்டுவர். மாட்டுக் கொட்டிலின் முன் பொங்கலிட்டு, காளை, பசுவிற்குப் படையலிடுவர். பொங்கல் பொங்கும்போது, பட்டிபெருக பால் பானை பொங்க என்று சொல்லி குலவையிடுவர். அதன்பின்னர், பசுமாட்டை கோயிலுக்கும், காளை மாட்டை மஞ்சுவிரட்டுக்கும் அழைத்துச் செல்வர்.
பசு ஸ்லோகம் சொல்லுங்க: ஜாதகத்தில் சுக்கிரன் நீச்சமாகவோ அல்லது பலம் இழந்தோ இருந்தால் பசுசாபம் இருக்கும் என்று ஜோதிடசாஸ்திரம் கூறுகிறது. இதனால், தம்பதியருக்குள் ஒற்றுமை இல்லாமல் பிரிந்திருக்க நேரிடும். இதற்குப் பரிகாரமாக வெள்ளிக்கிழமையில் பசுவை வழிபடுவது சிறந்த பரிகாரம். காலையில் நீராடி பச்சைப்புல், அகத்திக்கீரை முதலியவற்றை எடுத்துக் கொண்டு பசுவை மூன்றுமுறை வலம் வந்தபடி இந்த பசு ஸ்லோகத்தைச் சொல்லுங்கள். கொடிய பாவம் கூட இவ்வழிபாட்டின் மூலம் நீங்கும் என்று முனிவர்கள் கூறியுள்ளனர். இவ்வழிபாட்டை வெள்ளியன்று சுக்கிர ஓரையில் செய்வது மிகவும் சிறப்பாகும்.
ஸ்லோகம்:
ஸெளர பேய்ய: ஸர்வ ஹிதா:
பவித்ரா: புண்யராஸய:!
ப்ரதிக்ருண்ணம்த்விமம் க்ராஸம்
காவஸ்த்ரைலோக்ய மாதர:!!
பொருள்: காமதேனு வம்சத்தை சேர்ந்தவளே! எல்லோருக்கும் நன்மை அருள்பவளே! தூய்மையானவளே! புண்ணிய வடிவானவளே! மூவுலகத்திற்கும் தாயாகத் திகழ்பவளே! இந்தப் புல்லைப் பெற்றுக் கொள்வாயாக. இந்த ஸ்லோகத்தைச் சொல்லியபடி பசுவை மூன்று முறை வலம் வந்து வணங்கவேண்டும்.
கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா: ஸ்ரீகிருஷ்ண ஸ்தோத்திரம் பாகவதத்தில் இடம்பெற்றுள்ளது. இதன் தமிழாக்கம் இங்கு தரப்பட்டுள்ளது. மாட்டுப்பொங்கலான இன்று பாலகிருஷ்ணரை தியானித்து இதனைப் பாராயணம் செய்தால் நற்பலன் உண்டாகும்.
- மேலான கடவுளே! அனைத்து உயிர்களின் உள்ளும் புறமும் வீற்றிருப்பவனே! மாயையில் இருந்து விடுவிப்பவனே! யாரும் அறியமுடியாத அதிசயமானவனே! அழிவற்றவனே! ஞானம் நிறைந்தவனே! பக்தியோகம் அறியாத நான் உம்மை வணங்குகிறேன்.
- வசுதேவரின் பிள்ளையே! தேவகியின் வயிற்றில் உதித்தவனே! நந்தகோபரின் குமாரனே! பசுக்களைப் பரிபாலனம் செய்தவனே! கிருஷ்ணனே! உம்மை பலமுறை வணங்குகிறேன்.
- நாபிக்கமலம் கொண்டவனே! தாமரை மாலை அணிந்தவனே! தாமரை மலரைப் போன்ற கண்களைக் கொண்டவனே! பத்மரேகை அமைந்த திருப்பாதங்களைக் கொண்டவனே! உம்மை சரணடைகின்றேன்.
- சிறையில் வாடிய தேவகியைக் காத்தவனே! அரக்குமாளிகையில் நெருப்பிட்டபோது பாண்டவர்களைக் காத்தவனே! திரவுபதியின் மானத்தைக் காத்த தயாபரா! ஜகத்குருவான கிருஷ்ணா! பிறவிச்சுழலில் இருந்து காத்தருள்வாயாக.
- பற்றற்ற ஞானியர் நெஞ்சில் குடிகொண்டவனே! முகுந்தனே! வசுதேவனே! கிருஷ்ணா! அடக்கம் கொண்ட நல்லவர்களால் மட்டும் அடையத் தக்கவனே! ஏழைகளையும், நல்லவர்களையும் சொத்தாக நினைப்பவனே! மோட்சத்தை அருள்பவனே! உம் திருவடியில் அடைக்கலம் புகுந்துவிட்டேன். காத்தருள்வாயாக.