அரியலூரில் பொங்கல் பண்டிகை கோலாகலம்!
அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன், பொதுமக்கள் சார்பில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தமிழர்களின் அறுவடை திருநாளாம் பொங்கல் பண்டிகையின் முதல் நாளான நேற்று முன்தினம் போகி பண்டிகையை முன்னிட்டு, அரியலூர் மாவட்ட பொதுமக்கள், பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற பாரம்பரிய நோக்கத்துடன், தமது வீட்டை சுத்தம் செய்து, கொழுக்கட்டை மற்றும் சுண்டல் படையலுடன் இறைவழிபாடு செய்தனர். தொடர்ந்து பொங்கல் திருநாளாம் தை முதல் நாளான நேற்று, அரியலூர், ஜெயங்கொண்டம், உடையார்பாளையம், செந்துறை, திருமானூர், ஆண்டிமடம், தா.பழூர், திருமழபாடி, கீழப்பழுவூர், விக்கிரமங்கலம், மீன்சுருட்டி, மாத்தூர், அயன்சுத்தமல்லி உள்பட, அரியலூர் மாவட்டம் முழுவதும் உள்ள நகரங்கள், கிராமங்கள் உள்ளிட்ட அனைத்து ஊர்களிலும் சர்க்கரை பொங்கல் மற்றும் வெண் பொங்கல் சமைத்து, கரும்பு, வாழைப்பழம் உள்ளிட்ட பொருட்களுடன் சூரிய பகவானுக்கு படையல் போட்டு வணங்கினர். மேலும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் "பொங்கலோ பொங்கல் என குதூகலத்துடன் கோஷமிட்டு இறைவணக்கம் செய்தனர். இளைஞர்கள், இளம் பெண்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும், தமது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்து கொண்டனர்.