உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வாத்திய பேதம்

வாத்திய பேதம்

கோயில்பூஜை விழாக்களில் நால்வகை வாத்திய உபச்சாரம் விதிக்கப்படுகிறது. பொதுவாக இசைக்கருவிகளை சிவாகமம் நான்கு வகையாகப் பகுத்துக்கூறுகிறது. ததம், ஆனத்தம், க்ஷிரம், கனம் என்று வாத்தியங்கள் நால்வகையாகும். அதாவது வாதகரால் அடித்து மீட்டப்படுபவை ததம் ஆகும். வீணை, தம்புரா, வயலின் போன்று கையால் மீட்டக்கூடிய நரம்புநாளமுள்ள கருவிகள்யாவும் ததவாத்தியம் எனப்படும், முரஜம், முரசு, தபேலா, மத்தளம், மேளம் (தவில்), பேரீ முதலான அடித்து ஒலி எழுப்பக்கூடிய தோல்கட்டிய இசைக்கருவிகள் ஆனத்தம் (ஆஹதம் - அடித்து வெளிப்படுத்துதல்), ஆஹத வாத்தியம் எனப்படுபவை மூங்கில் முதலான மரத்தினாலானதும். துளையிட்டுக் காற்றை அடைத்தும் எழுப்பியும் இசைக்கும் துளைக்கருவிகளான புல்லாங்குழல், நாதஸ்வரம், மகுடி முதலானவை சுஷிரவாத்தியம் எனப்படும். (சுஷிரம் - துளை), வெங்கலம் முதலிய - உலோகத்தாலான சிறுதாளம், பெரிய பிரம்ம தாளம், ஜல்லரீ (ஜால்ரா) கைமணி, எக்காளம், திருச்சின்னம் துந்துபி முதலான உலோகத்தின் மெல்லிய கன வடிவமைப்பு கொண்டதுமான உலோகக்கருவிகள் கனவாத்தியம் எனப்படும்.

தெய்வத்திற்கு உற்சவம் பயணமாகப் புறப்பாடு எங்கு செய்யப்படுகிறதோ அங்கு தவறாது வாத்திய கோஷத்துடனேயே செய்யப்படவேண்டும். வாத்தியமின்றி ஊர்வலம், வீதியுலா, கோயில்வலம், புறப்பாடு ஆகியவற்றைச் செய்வது  குற்றமாகும். சுவாமி புறப்பாட்டை ஊரை வலமாகவும், மெதுவாகவும் செய்வதுமுறை.

ஆகமங்களில் நீராட்டல், நிவேதித்தல், தூபதீபாதிக காலம், சுற்றும் காலம், அதிகாலை ஆகிய முக்கியமான ஐந்து காலங்களில் வாத்திய கோஷத்தைத் தவறாமல் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

சச்சபுடம், ஆரபுடம், உத்கடிதம், மஹோஜ்வலம், சிம்மகர்ணம், லட்டயம், (மட்டயம்), கண்டீரவம், விலாஸிநீ, லம்புகம் சிம்ஹநாதம், ஜம்புடம், சிம்மவாத்யம், கும்பவாத்யம், கர்ணவாத்யம், பலகாவாத்யம், மிருதுபாஷிணீ, அனங்கவாத்யம், சங்கிநீ, வீரம், புஷ்பபட்டஸம், நாதம், ஹூங்காரம், வல்லீ, ஜாமிநீ, மதனீ, ஸந்தியாவாத்யம், வாஞ்சிநீ ஆகியவை 27 வகை வாத்தியக்கருவிகளாக உத்தர காரணாகமத்தில் கூறப்பட்டுள்ளன. மேலும் இயற்கை ஒலிகளை எழுப்பும் பலவகை இசைக்கருவிகளும், இன்னிசைக் கச்சேரிகளுக்கு உரியவையும் ஏற்புடைய வாத்யங்களே ஆகும். இந்த வாத்ய யோபசாரம் துவனி மந்திர நாதரூபமான இறைவனுக்கு, உத்தமமான நாத உபாசன ரூபமான சிறந்த உபசாரமாகிறது. ஊர்வலத்தின்போது யானை, ஒட்டகம், குதிரை, காளை, ஆகியவற்றின்மேல், முதுகில் படகம் முதலிய இசைக்கருவிகளை வைத்து வாசிக்குமாறு காரணாகம ஸ்வாமி புறப்பட்டு விதிமுறை கூறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !