உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீரங்கம் கோயிலுக்குள் செருப்புடன் புகுந்தவரிடம் போலீஸ் விசாரணை

ஸ்ரீரங்கம் கோயிலுக்குள் செருப்புடன் புகுந்தவரிடம் போலீஸ் விசாரணை

திருச்சி: திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்குள், செருப்புகளுடன் புகுந்தவரை, போலீசார் கைது செய்துள்ளனர். திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், நேற்று காலை சுவாமி தரிசனத்துக்காக, வந்த பக்தர்களை, மெட்டல் டிடெக்டர் நுழைவு வாயில் வழியாக, போலீசார் சோதனை செய்து அனுப்பிக் கொண்டிருந்தனர்.நேற்று காலை, 10:40 மணிக்கு, ரெங்கா ரெங்கா கோபுரம் வழியாக, கோவிலுக்குள் புகுந்த வாலிபர், கருவறைக்கு முன், துவார பாலகர் சிலைகளுடன் அமைந்த நுழைவு வாயிலுக்கு அருகே சென்று, ஒரு பையை கருவறைக்குள் வீசியுள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த கோவில் பணியாளர்கள், அந்த வாலிபரை மடக்கிப் பிடித்தனர். அவர் வீசியெறிந்த பையை எடுத்து சோதனை செய்தனர். அதிலிருந்து செருப்புகள் விழுந்துள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த கோவில் பணியாளர்கள், அந்த நபரை, கோவிலுக்குள் இருந்து அப்புறப்படுத்தி, போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். ஸ்ரீரங்கம் போலீஸ் ஸ்டேஷனில் அவரிடம் விசாரணை நடத்தியதில், தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூரை சேர்ந்த தர்மராஜ், 27 என்பதும், கடந்த சில மாதங்களாக ஸ்ரீரங்கத்தில் சுற்றித் திரிந்ததும் தெரிய வந்தது.

போலீசில் புகார்: கோவில் நிர்வாகம் தரப்பில், போலீஸ் உதவி கமிஷனருக்கு கொடுத்துள்ள புகாரில், கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வரிசையில் வந்த வாலிபர் ஒருவர், பெரிய பெருமாள் சன்னதிக்கு முன் உள்ள குலசேகரன் படியில், ஒரு பையை போட்டார். கோவில் பணியாளர்கள், அவரை பிடித்து வெளியே அழைத்து வந்து, அவர் போட்ட பையை எடுத்து சோதித்த போது, அதில், ஒரு சிறிய கத்தி, ஒரு கத்திரிக் கோல் மற்றும் அழுக்கு துணி இருந்தது. எனவே, அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது. மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் பேசிய அந்த வாலிபர் மீது, நான்கு பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிந்து, கைது செய்தனர். பின், திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !