தேனி முருகன் கோயில்களில் வைகாசி விசாகம் கோலாகலம்
தேனி : மாவட்டத்தின் பல்வேறு பகுதி முருகன் கோயில்களில் நேற்று வைகாசி விசாகத்தையொட்டி சுவாமிக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தேனி- பெரியகுளம் ரோட்டில் உள்ள வேல்முருகன் கோயிலில் வைகாசி விசாக திருவிழா கொண்டாடப்பட்டது. காலையில் பக்தர்கள் பால்குடம் எடுத்தனர். பின்னர் சுவாமிக்கு அபிஷேகம், சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் சுவாமி கோயிலில் இருந்து கம்போஸ்ட் ஓடைத்தெரு, மிராண்டா லயன் மெயின் தெரு உள்ளிட்ட 4 பிரகார வீதிகள் வழியாக வலம் வந்து மீண்டும் கோயில் வந்தடைந்தார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
* கூடலுார் கூடல் சுந்தரவேலவர் கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது. வள்ளி தெய்வானையுடன் சுந்தரவேலவருக்கு வெள்ளிக் கவசம் அணிவிக்கப்பட்டு மலர் அலங்காரம் செய்யப் பட்டிருந்தது.அபிஷேகம், ஆராதனையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பழநி மலை சுருளி மலை பாதயாத்திரை குழு பெண்கள் பஜனை பாடல்கள் பாடினர். பிரசாதம் வழங்கப்பட்டது.
*தேவாரம் சுப்ரமணியர் கோயிலில் மூலவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. பக்தர்கள் மயில்காவடி, இளநீர் காவடி, பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். ஏற்பாடுகளை தேவாரம் ஆயிர வைஸ்யர் சமூகத்தினர் செய்திருந்தனர்.
*சின்னமனுார் சிவகாமியம்மன் கோயிலில் பாலசுப்ரமணியர் சன்னதியில் சிறப்பு பூஜைகள நடந்தன. சுவாமிக்கு மஞ்சள், இளநீர், தயிர், பால் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.