மாகாளியம்மன் கோவிலில் முப்பெரும் விழா
பல்லடம்;சின்ன வடுகபாளையம் மாகாளியம்மன் கோவிலில், முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது. பல்லடத்தை அடுத்த சின்ன வடுகபாளையம் மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம், ஏப்., 29 அன்று நடந்தது. அதை முன்னிட்டு மண்டல பூஜை நடைபெற்று வந்த நிலையில், நிறைவு விழா நடந்தது. விநாயகர் கோவில் ஆண்டு விழா, மாகாளியம்மன் கோவில் மண்டல பூஜை நிறைவு விழா, மற்றும் 27 நட்சத்திர மரக்கன்றுகள் நடுவிழா என, முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது. இதில், 108 திருவிளக்கு வழிபாடு, ேஹாம பூஜைகள் மற்றும் திருக்குட நன்னீராட்டு உள்ளிட்டவை நடைபெற்றன. தொடர்ந்து, விநாயகர் கோவில் ஆண்டு விழா மற்றும் மண்டல அபிஷேக நிறைவு விழா நடந்தது. அறிவியலும் ஆன்மிகமும் எனும் தலைப்பில், பேராசிரியர் ஜெயப்பிரகாசம் மற்றும் மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் எனும் தலைப்பில்,வாவிபாளையம் அனந்தகிருஷ்ணன் சிறப்புரை ஆற்றினர். விழாவையொட்டி, கோவில் வளாகத்தில், 27 நட்சத்திர மரக்கன்றுகள் நடப்பட்டன. முப்பெரும் விழாவை முன்னிட்டு, மாகாளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.