மருதமலையில் வைகாசி விசாகம்
ADDED :2722 days ago
வடவள்ளி;மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நேற்று வைகாசி விசாகத்தை ஒட்டி திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். முருகப் பெருமானின் ஏழாம் படைவீடாக மருதமலை கருதப்படுகிறது. இக்கோவிலில் நேற்று, வைகாசி விசாகத்தை ஒட்டி, காலை 5:00 மணிக்கு மங்கள வாத்தியங்களுடன் கோமாதா பூஜையும், அதையடுத்து, சந்தனம், பால், தயிர், நெய் போன்ற திரவியங்களால் மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும் நடந்தன. மூலவர், தங்க காப்புடன் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதை தொடர்ந்து, உற்சவ மூர்த்திகளான சுப்பிரமணியசுவாமி, வள்ளி தெய்வானை சமேதரராய் தங்கமயில் வாகனத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோஷத்துடன், முருகப்பெருமானை தரிசித்தனர். மதியம் சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.