உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நோய்நொடியின்றி வாழ நாட்டரசன் கோட்டையில் செவ்வாய் பொங்கல் விழா!

நோய்நொடியின்றி வாழ நாட்டரசன் கோட்டையில் செவ்வாய் பொங்கல் விழா!

சிவகங்கை:நாட்டரசன்கோட்டையில் செவ்வாய் பொங்கலை முன்னிட்டு, நகரத்தார் பெண்கள் பொங்கல் வைத்து நேர்த்தி செலுத்தினர். விழாவில், வரன் தேடும் படலும் நடந்தது.சிவகங்கை மாவட்டம், நாட்டரசன்கோட்டை நகரத்தார்கள் ஆண்டுதோறும் தை பொங்கலை அடுத்து வரும் முதல் செவ்வாய் அன்று, கண்ணுடைய நாயகி கோவில் முன் பொங்கல் (வெண் பொங்கல்) வைத்து அம்மனுக்கு நேர்த்தி செலுத்துவர்.

புள்ளி தேர்வு: வணிகம் காரணமாக அமெரிக்கா, பிரான்சில் வசிக்கும் நகரத்தார்கள்,ஆண்டிற்கு ஒரு முறை இங்கு கூடுவர். நகரத்தார்கள் 889 குடும்பத்தின் (புள்ளிகள்) தலைவர் பெயரை, வெள்ளி குடத்தில் போட்டு, அம்மன் முன் குலுக்கி எடுப்பர். அதில் முதலில் வரும் பெயரின் குடும்பத்திற்கு,கோவில் சார்பில் மரியாதை செய்யப்படும். அதன்படி, இந்த ஆண்டுஆர். கருப்பையா செட்டியார் குடும்பம் தேர்வானது. இவரது பானையில் (மண் பானை) அனைத்து குடும்பத்தினரும் (புள்ளிகள்) பால் ஊற்றி,மரியாதையுடன் அழைத்து சென்றனர்.இக்குடும்பத்தினர், நேற்று மாலை 5 மணிக்கு பொங்கல் (வெண்பொங்கல்) வைத்தனர். அதற்கு அடுத்தபடியாக அனைவரும் ஒரு சேர பொங்கல் வைத்தனர்.பின்னர் அம்மனுக்கு அபிஷேக, ஆராதனை நடந்தது. வரன் தேடும் படலம்:செவ்வாய் பொங்கலன்று உறவினர்களுடன் கூடும் நகரத்தாரில் திருமணத்திற்கு தயாராவோருக்கு, வரன் தேடும் படலமும் நடந்தது.நாட்டரசன் கோட்டை ஓ.கருப்பையா செட்டியார் கூறியதாவது: 150 ஆண்டுகளாக நகரத்தார் சார்பில், செவ்வாய் பொங்கல் விழா நடந்து வருகிறது. நகரத்தார்கள் நோய்நொடியின்றி சுபிட்சமாக வாழவே, அம்மனுக்கு பொங்கல் வைத்து நேர்த்தி செலுத்துகிறோம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !