சென்னை வந்த சிலைகளுக்கு மேள தாளங்களுடன் வரவேற்பு
சென்னை: குஜராத்தில், தனியார் அருங்காட்சியகத்தில் இருந்து மீட்கப்பட்டு, ரயிலில், சென்னைக்கு கொண்டு வரப்பட்ட, ராஜராஜ சோழன் மற்றும் உலகமாதேவி சிலைகளுக்கு, மேள தாளங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. தஞ்சை பெரிய கோவிலில் இருந்த, 1,000 ஆண்டுகள் பழமையான, ராஜராஜ சோழன் மற்றும் உலகமாதேவி சிலைகள், 60 ஆண்டுகளுக்கு முன், திருட்டு போயின. 150 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்தச் சிலைகள், குஜராத் மாநிலம், ஆமதாபாதில் உள்ள, சாராபாய் பவுண்டேஷனுக்கு சொந்தமான, ‘காலிகோ’ அருங்காட்சியகத்தில் இருப்பது தெரிய வந்தது. தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு, ஐ.ஜி., பொன் மாணிக்கவேல் தலைமையிலான போலீசார், இரு சிலைகளையும் மீட்டனர்.
மீட்கப்பட்ட சிலைகளுடன், பொன். மாணிக்வேல் தலைமையிலான போலீசார், ஆமதாபாத்தில் இருந்து, நவஜீவன் எக்ஸ்பிரஸ் ரயிலில், நேற்று மாலை, சென்னை சென்ட்ரல், ரயில் நிலையம் வந்தனர். அப்போது சிலைகளுக்கு, மேளதாளங்கள் முழங்க, தேவாரா பாடல்கள் பாடி வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர், பாண்டியராஜன், ரயில்வே பாதுகாப்பு குழு உறுப்பினரும், பா.ஜ., தேசிய செயலாருமான, எச்.ராஜா உள்ளிட்டோர், வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இதுகுறித்து, ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் கூறியதாவது: மீட்கப்பட்டுள்ள சிலைகளை, நீதிமன்றத்தில் ஒப்படைத்து, மூன்று நாட்களுக்குள், தஞ்சை பெரியகோவிலில் வைக்க உள்ளோம். உலகின் பல நாடுகளில் உள்ள, தமிழக பொக்கிஷங்களான சிலைகளை, சட்டரீதியாக மீட்டு, மீண்டும், தமிழகத்திற்கே கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.