ஆதி அக்னீஸ்வரர் கோவிலில் உற்சவர் சிலைகள் கொள்ளை
ஊத்துக்கோட்டை:கோவிலின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள், ஐம்பொன்னால் ஆன பிரதோஷ உற்சவர் சிலைகளை கொள்ளை அடித்துச் சென்றனர். திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியம், நெய்வேலி கிராமத்தில் உள்ளது ஆதிஅக்னீஸ்வரர் கோவில். கிராம கோவிலில், பல ஆண்டுகளுக்கு முன் செய்யப்பட்ட பிரதோஷ உற்சவர் சிலை, சிவபெருமான், பார்வதி தேவியுடன் அருள்பாலிக்கிறார்.ஒவ்வொரு மாதமும், பிரதோஷ தினத்தன்று சிவபெருமான் மற்றும் நந்திக்கு, சிறப்பு பூஜை செய்யப்படும். பின் உற்சவர், சிறப்பு அலங்காரத்தில் கோவிலை சுற்றி வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இதில் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்று, சுவாமியை வழிபடுவர். நேற்று முன்தினம் இரவு, வழக்கம் போல் கோவில் பூட்டப்பட்டு இருந்தது. நேற்று காலை, கோவில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டதை கண்ட கிராம மக்கள், உள்ளே சென்று பார்த்தனர். கோவிலில் இருந்த, ஒன்றரை அடி உயரமுள்ள, ஐம்பொன்னால் ஆன பிரதோஷ உற்சவர் சிலைகள் கொள்ளை அடிக்கப்பட்டது தெரிந்தது.இதுகுறித்து, பென்னலுார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனர்.