வரதர் கோவிலில் தீர்த்தவாரி தெப்பக்குளத்தில் தடுப்பு வேலி
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில், தீர்த்தவாரி உற்சவத்தில் பங்கேற்கும் பக்தர்களின் பாதுகாப்பிற்காக, கோவில் குளத்தில், தற்காலிக தடுப்பு வேலி அமைக்கும் பணி நடந்து வருகிறது. காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோவில் பிரம்மோற்சவம், மே 27ல் துவங்கியது. 29ல் கருடசேவை உற்சவம் நடந்தது. இன்று காலை, தேரோட்டம் நடைபெறுகிறது. ஒன்பதாம் நாள் உற்சவமான, ஜூன் 4ல், கோவிலில் உள்ள, அனந்தசரஸ் என்ற புஷ்கரணி தெப்பக்குளத்தில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெற உள்ளது. இந்த குளம், 257 அடி நீளம், 196 அடி அகலம், 20 அடி ஆழம் கொண்டது.தீர்த்தவாரி உற்சவத்தின் போது, ஏராளமான பக்தர்கள் குளத்தில் இறங்கி நீராடுவர். குளத்தின், படிகளில் பாசி படர்ந்துள்ளதால், பக்தர்களுக்கு வழுக்கும் நிலை உள்ளது. இதனால், கோவில் நிர்வாகம் சார்பில், பக்தர்களின் பாதுகாப்பிற்காக, இரும்பு பைப்புகள் மூலம், தற்காலிக தடுப்பு வேலி அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.