நினைத்ததை நிறைவேற்றும் எளிய வழிபாடு
திருமாலுக்கு சுதர்சனம் என்னும் சக்கரம், பாஞ்சஜன்யம் என்னும் சங்கு, நந்தகி என்னும் வாள், சாரங்கம் என்னும் வில், கவுமோதகி என்னும் கதாயுதம் ஆகிய பஞ்சாயுதங்கள் உள்ளன. இவற்றில், மற்ற ஆயுதங்களுக்கு இல்லாத சிறப்பு சக்கரத்திற்கு உண்டு. இந்த சக்கரத்தை ‘சக்கரத்தாழ்வார்’ என்னும் பெயரில் அழைக்கின்றனர். சக்கரத்தாழ் வாருக்கு தனி வழிபாடு உண்டு. இதுபற்றிய குறிப்பை பாஞ்சராத்ர ஆகமம் விரிவாக கூறுகிறது. திருமால் கஜேந்திர வரதராக வந்தபோது, சக்ராயுதத்தை ஏவியே கூகு என்னும் முதலையைக் கொன்று, கஜேந்திரன் என்னும் யானையைக் காத்தார். மூன்று கண்களைக் கொண்ட சக்கரத்தாழ்வார், சங்கு, சக்கரம், வில், அம்பு, கத்தி, வளை, சூலம், பாசம், தந்தம், தாமரை, வஜ்ரம், கேடயம், கலப்பை, உலக்கை, தண்டம், வேல் ஆகியவற்றை ஏந்தியிருப்பார். 16 கைகள் கொண்டவர். சக்கரத்தாழ்வாருக்குப் பின்புறத்தில் நரசிம்மர் யோகநிலையில் காட்சியளிப்பார். தென்மேற்கு திசையான கன்னிமூலையில் இவருக்கு சன்னதி இருக்கும். சனிக்கிழமைகளில் 12,24,48 ஆகிய எண்ணிக்கையில் வலம் வந்து இவரை வணங்கினால் நினைத்தது நிறைவேறும்.