ஏகநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகம்
விருத்தாசலம்: விருத்தாசலம் ஏகநாயகர் கோவில் கும்பாபிஷேகத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விருத்தாசலம் ஏகநாயகர் கோவிலில் புதிய முன்மண்டபம், சுற்றுமண்டபம் அமைக்கப்பட்டு நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. அதைனையொட்டி கடந்த 7 ம் தேதி இரவு யாகசாலை பூஜை துவங்கியது. நேற்று காலை ஆறாம்கால யாக் பூஜை தருமை ஆதீனம் 26 வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள், தருமபுரம் இளைய சந்நிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள், திருப்பனந்தாள் காசி மடம் இளவரசு திருஞானசம்பந்த சுவாமிகள், திருமுதுகுன்றம் குமாரதேவர் மடம் 24 வது குருமகா சந்நிதானம் சீர்வளர்சீர் இரத்தின வேலாயுத சிவப்பிரகாச பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் சிவஆகம முறைப்படி துவங்கியது.
காலை 9:25க்கு பூர்ணாஹூதி செய்து, கடம் புறப்பாடாகி காலை 10:30 மணிக்கு மேல் விமான கலசம் கும்பாபிஷேகமும், 11:00 மணிக்கு ஏகநாயகருக்கு அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தை ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்தனர். நிகழ்ச்சியில் வடலூர் ஊரன் அடிகள், ஜெயின் ஜீவல்லரி உரிமையாளர்கள் அகர்சந்த், சுரஷே்சந்த், ரமஷே்சந்த், தீபக்சந்த், அரியந்த், மேலாளர் பழனி, விவேக், தொழுதுார் ஆறுமுகம் கல்வி குழும தலைவர் ராஜபிரதாபன், திட்டக்குடி தொழிலதிபர் ராஜன், திருமுட்டம் பூமாலை சண்முகம், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராஜேந்திரன், ஓய்வு பெற்ற டி.ஐ.ஜி., மாசானமுத்து, கலைச்செல்வன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ குழந்தை தமிழரசன், முன்னாள் சேர்மன் சுந்தரராஜன், வழக்கறிஞர் மெய்கண்டநாதன், வசந்த நிலையம் ராமதாஸ், வர்த்தக சங்க தலைவர் சண்முகம், கண்ணன், சபாநாதன், ராமலிங்கம், ஜெய்சங்கர், மருத்துவர் தெய்வசேதுபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.