பெரியவர்களை அவமதிக்காதீர்!
சாலைகளில் பயணம் செய்யும் போது, ‘இது விபத்துப்பகுதி’ அறிவிப்புப் பலகை சில இடங்களில் இருக்கும். எதற்காக... எச்சரிக்கையாக பயணம் செய்ய வேண்டும் என்பதற்காகவே. அதுபோல, வாழ்க்கைப் பயணத்திலும் நம்மை எச்சரித்து நல்வழி காட்டவே, இதிகாச, புராணங்கள் உள்ளன. சிறிது நேர சாலைப் பயணத்திற்கே எச்சரிக்கை தேவைப்படும் போது, வாழ்க்கைப்பயணத்திற்கு எவ்வளவு எச்சரிக்கை வேண்டும் என்பதை உணர்த்தும் நிகழ்ச்சி இது.அர்ஜூனனின் பேரன், அபிமன்யுவின் மகன் என்றெல்லாம் புகழப்பட்ட பரீட்சித்து அரசராக இருந்த காலத்தில் ஒருநாள்...பரீட்சித்து வேட்டைக்குப் போன போது, விலங்குகளைத் துரத்திக் கொண்டு காட்டில் நீண்ட துõரம் சென்று விட்டார். தனித்து விடப்பட்ட அவர், பசியாலும், தாகத்தாலும் சோர்ந்து விட்டார். அங்கே சமீகர் என்ற முனிவரின் ஆஸ்ரமத்தைக் கண்டார். உள்ளே சென்று, தவத்தில் இருந்த முனிவரிடம் தண்ணீர் கேட்டார்.முனிவரோ தியானத்தில் மூழ்கியிருந்ததால், ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை.அரசனான தான் கேட்டும், தன்னை முனிவர் அவமதித்து விட்டாரே என எண்ணிய பரீட்சித்து, கோபத்திற்கு ஆளானார். அவரை எழுப்ப என்ன செய்யலாம் என யோசித்தார். சுற்றுமுற்றும் பார்த்தார்... அவரது கண்களில், ஒரு செத்த பாம்பு தென்பட்டது. அதை வில் நுனியால் எடுத்த பரீட்சித்து, சமீகமுனிவரின் கழுத்தில்மாலையாகப் போட்டு விட்டுத் திரும்பினார். ஒரு முனிவரை அவமதித்ததால், ஏற்படப் போகும் விளைவு பற்றி அவர் உணரவில்லை. அரசன் என்றால், முனிவர்களும் தனக்கு கட்டுப்பட்டாக வேண்டும் என்ற ஆணவ எண்ணமே அவரிடம்மிகுந்திருந்தது.