அய்யா கோவிலில் ஆனி மாத திருவிழா
மணலிபுதுநகர்: மணலிபுதுநகர், அய்யா வைகுண்ட தர்மபதி கோவில், ஆனி மாத திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. மணலிபுதுநகரில், அய்யா வைகுண்ட தர்மபதி கோவில் பிரசித்தி பெற்றது. இங்கு, ஆண்டுதோறும், ஆனி மாதத்தில், திருவிழா நடைபெறும். இவ்வாண்டு, வல்லத்தான் வைகுண்ட பரம்பொருள் நிச்சயித்தபடி, வைகுண்ட வருடம், 186 ஆனி மாத திருவிழா, நேற்று முன்தினம் காலை, பணிவிடை உகப்படிப்புடன் துவங்கியது. மதியம், தர்ம பெட்டக தர்மவான்களுக்கு, பரிவட்ட பரிவர்த்தனை நிகழ்வு நடைபெற்றன. மாலையில், மாணவ - மாணவியருக்கு நோட்டு, புத்தகங்கள்; முதியோர்களுக்கு உடை வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இரவு, இந்திர விமானத்தில், அய்யா பதிவலம் வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அப்போது, கூடியிருந்த பக்தர்கள், ’அய்யா ஹர ஹர சிவ சிவ’ என முழங்கினர். விழாவில், 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.