உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பல்லவர் கால குடைவரை கோவிலின் நிலை..பரிதாபம்!

பல்லவர் கால குடைவரை கோவிலின் நிலை..பரிதாபம்!

செஞ்சி: செஞ்சியை அடுத்த மேலச்சேரியில் ஆயிரத்து ஐநுாறு ஆண்டுகள் பழமை வாய்ந்த பல்லவ மன்னர்களின் குடைவரை கோவிலை புதுப்பித்து திருப்பணி செய்ய கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் வரலாற்று நினைவு சின்னங்கள் அதிகம் உள்ள பகுதியாக, செஞ்சி உள்ளது. இங்கிருந்து 5 கி.மீ., தொலைவில் உள்ள மேலச்சேரியில் (வரலாற்றில் இதை மேல் செஞ்சி என்றும் குறிப்பிடுவதுண்டு) பிரகன்ன நாயகி சமேத மத்தளேஸ்வரர் கோவில் உள்ளது.

வரலாற்று தகவல்
: விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மண்டகப்பட்டு, தளவானுார் குடைவரை கோவில்கள் வரலாற்றில் பிரபலமான குடைவரை கோவில்களாக உள்ளன. இதற்கு முந்தைய காலத்தை சேர்ந்ததாக மேலச்சேரியில் உள்ள பிரஹன்ன நாயகி சமேத மத்தளேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலை வரலாற்று ஆய்வாளர்கள் சிகாரி பல்லவேஸ்வரம் என குறிப்பிட்டுள்ளனர். கிராமத்தின் வடகிழக்கு மூலையில் (ஈசான்யம்) நீளமான பாறையில் சதுரமான இரண்டு துாண்களுடன் குடைவரையின் முன்பகுதி உள்ளது. உள்பகுதியில் அர்த்தமண்டபம், முகமண்டபம் என பிரிக்காமல் இரண்டும் சேர்ந்து ஒரே மண்டபமாக குடைந்துள்ளனர். கருவறையின் உள்ளே தாய்ப்பாறையில் சுமார் 5 அடி உயர அளவில் 7 அடி சுற்றளவில் என்கோண வடிவிலான சிவலிங்கத்தை வடித்துள்ளனர். கருவறைக்கு வெளியே உள்ள மண்டபத்தின் வடக்கு பகுதியில் தாய்ப்பறையில், நின்ற நிலையில் பார்வதியின் அம்சமான பிரஹன்ன நாயகியை மிக நேர்த்தியாக புடைப்பு சிற்பமாக வடித்துள்ளனர்.

குடை வரையின் வெளியே தெற்கு பகுதி சுவற்றில், விநாயகரின் புடைப்பு சிற்பமும், கருவறைக்கு வெளியே சுப்பரமணியர், வள்ளி, தேவயானை, சிலைகளும் உள்ளன. இவைகள் பிற்காலத்தை சேர்ந்தவை. இப்பகுதியை ஆட்சி செய்த நாயக்க மன்னர்கள் விழாக்கள் நடத்தவும், பைரவர் உள்ளிட்ட சிலைகளை வைத்து வழிபடவும் குடைவரையின் முன் பகுதியில் பிற்காலத்தில் கருங்கல் துாண் மற்றும் செங்கல்களை கொண்டு இரண்டு பிரிவுகளாக மண்டபங்களை கட்டியுள்ளனர். இவற்றிற்கு வெளியே கருவறையை நோக்கியபடி சிறிய மண்டபத்தில் நந்தியும், (இந்த மண்டபம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இடிந்து விட்டது) நந்திக்கு பின்புறம் பலி பீடம், துஜஸ்தம்பமும், வடக்கே சிதிலமடைந்த கருங்கல் மண்டபமும், தெற்கே குடைவரை உள்ள பாறையின் தொடர்ச்சியை ஒட்டி படிகளுடன் கூடிய சிறிய குளமும் உள்ளது. குளத்தின் எதிரே கருங்கற்களால் கட்டப்பட்ட விக்ரகங்கள் இல்லாத இரண்டு சிறிய சன்னதிகளும், சன்னதிக்கு பின்னால் நான்கு துாண்களுடன், கலை நயம்மிக்க சுதை வேலைகளால் ஆன சிறிய உற்சவ மண்டபமும் உள்ளது.

கோவிலின் காலம்: தளவானுாரில் உள்ள சத்ருமல்லேஸ்வராயம் கோவிலை பல்லவ மன்னன் நரேந்திரன் என்னும் சத்ருமல்லனும் ( காலம் கி.பி. 580 முதல் 630), மண்டகப்பட்டில் உள்ள குடைவரைக்கோவிலை பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மனும் கட்டியுள்ளனர். இந்த இரண்டு இடங்களிலும் உள்ள குடைவரை கோவில்களின் முகப்பில் இரண்டு பக்கமும் துவார பாலகர்களை வடித்துள்ளனர். ஆனால் மேலச்சேரி குடைவரை கோவிலில் துவார பாலகர்கள் இல்லை. எனவே மேலச்சேரியில் உள்ள குடைவரை கோவில் தளவானுார், மண்டகப்பட்டு குடைவரை கோவில்களுக்கு முந்தைய காலத்தை சேர்ந்தவையாக இருக்கலாம் என வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இதன்படி மேலச்சேரி மத்திலீஸ்வரர் குடைவரைக் கோவில் மகேந்திரவர்மனின் தந்தையான சிம்மவிஷ்ணு காலத்தில் இந்த குடைவரை கோவில் உருவாக்கப்பட்டது என வரலாற்று அறிஞர் சுப்புராயலு தனது ஆய்வில் தெரிவித்துள்ளார். எனவே இந்த கோவில் 4 அல்லது 5ம் நுாற்றாண்டில் உருவாக்கப்பட்டிருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இந்த குடைவரை கோவிலில் பிற்காலத்தில் கட்டப்பட்ட முன்மண்டபங்கள் அனைத்தும் இடிந்து விழுந்து வருகின்றன. அடுத்து ஒரு பெருமழை பொழிந்தாலும் கோவில் முன்பகுதி முற்றிலும் இடியும் நிலையில் உள்ளது. எனவே மேலச்சேரி கிராம மக்கள் கோவிலை புதுப்பிக்க முடிவு செய்துள்ளனர்.

ஆலோசனை கூட்டம்: இதற்கான ஆலோசனை கூட்டம், கடந்த 25ம் தேதி பிரதோஷத்தன்று மாலை நடந்தது. கிராம பிரமுகர்கள் ரங்கராஜ், தனபால், வெங்கடேசன், முன்னாள் கவுன்சிலர் சேகர், கோவில் குருக்கள் சிவானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாலாஜி சுரேஷ் வரவேற்றார். சிவ தொண்டர் பாஸ்கரன், பொறியாளர் தமிழினியன், பரசுராமன், ஓய்வு பெற்ற வி.ஏ.ஓ., லட்சுமிபதி, ஓய்வு பெற்ற ஆசிரியர் ஜெயக்குமார் உள்ளிட்டவர்கள் கருத்துரை வழங்கினர். முடிவில் 30 பேர் கொண்ட திருப்பணிக்குழு அமைத்தனர். விரைவில் திருப்பணிக்கான மதிப்பீடு தயார் செய்து திருப்பணியை துவங்குவது என கூட்டத்தில் முடிவு செய்தனர். இதன் மூலம் அழிவின் விளிம்பில் இருக்கும் மிக பழமையான கோவிலை பாதுகாப்பதற்கான நடவடிக்கையை, மேலச்சேரி கிராம மக்கள் துவக்க உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !