உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 16ம் நூற்றாண்டு நாயக்கர் கால செப்பு நாணயம் கண்டெடுப்பு

16ம் நூற்றாண்டு நாயக்கர் கால செப்பு நாணயம் கண்டெடுப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அடுத்த, மேல் சிறுப்பாக்கம் கிராமத்தில், அருணாதிரி என பொறிக்கப்பட்ட, செஞ்சி நாயக்கர் கால, செப்பு நாணயம் கண்டெடுக்கப்பட்டது. திருவண்ணாமலை அடுத்த, மேல் சிறுப்பாக்கம் கிராமத்தில், வரலாற்று ஆய்வு நடுவத்தின்  தலைவர் பிரகாஷ், தொல்லியல் அறிஞர் சேகர் மற்றும் திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரி பேராசிரியர்கள் அடங்கிய குழுவினர், கள ஆய்வு நடத்தினர். அப்போது, 16ம் நூற்றாண்டை சேர்ந்த, செஞ்சி நாயக்கர் கால செப்பு நாணயம் கண்டெடுக்கப்பட்டது. இதுவரை  கிடைத்துள்ள, செஞ்சி நாயக்கர் கால நாணயங்களில், காளை, சூரியன், மங்கை, மயில், நரசிம்மம், ராமர், சங்கு பிறை சக்கரம், மச்சேந்திரன், அனுமன், நின்ற கோலத்தில் திருமால், அமர்ந்த நிலையில் பெண் தெய்வம், வேணுகோபாலர், கணபதி, கண்டபேருண்ட பட்சி  போன்ற உருவங்கள் பொறிக்கப்பட்டிருக்கும். இதில், திருவண்ணாமலையை குறிக்கும் வகையில், வட்டவடிவ கோட்டின் உட்புறம், 21 புள்ளிகள் மற்றும் மலை உருவம், மலையின் மேல் வலது புறம் சூரியன், இடது புறம் பிறை உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. நாணயத்தின்  மறுபக்கத்தில், ஒரு வட்டத்தில், 21 புள்ளிகள் பொறிக்கப்பட்டு, திருவண்ணாமலையை குறிக்கும் வகையில், தெலுங்கில், அருணாதிரி என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது. இவை, 5.10 மி.மீ., தடிமன் மற்றும் 1.8 மற்றும், 1.6 செ.மீ., அகலமும், 6.67 கிராம் எடையளவு கொண்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !