உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கூத்தனுர் சரஸ்வதி அம்மன் கோவில் கும்பாபிஷேம் கோலாகலம்

கூத்தனுர் சரஸ்வதி அம்மன் கோவில் கும்பாபிஷேம் கோலாகலம்

திருவாரூர்: கூத்தனுார் மகா சரஸ்வதி அம்மன் கோவில்  கும்பாபிஷேகம் நடந்தது.  திருவாரூர் மாவட்டம்,  நன்னிலம் அருகே,  பூந்தோட்டம் அடுத்த, கூத்தனுாரில்  அமைந்துள்ளது மகா சரஸ்வதி அம்மன் கோவில்.  தமிழகத்தில், சரஸ்வதிக்கு என, தனி கோவில் இருப்பது இங்குதான். இக்கோவிலில் அருள்பாலிக்கும்  சரஸ்வதி அம்மனை வழிப்பட்ட  வர கவியாகிய ஒட்டக்கூத்தன், வர கவிபாடும் திறனை பெற்று, சோழமன்னர்கள் காலத்தில், ‘கவிச்சக்கரவர்த்தி’என்ற பட்டத்தை பெற்றார் என்பது வரலாறு.


இரண்டாம் குலோத்துங்க சோழனின்  நன்மதிப்பை பெற்ற ஒட்ட கூத்தனுக்கு, இக்கிராமத்தை, பரிசாக அம்மன்னர் அளித்துள்ளார். ஆதலால், இவ்வூர் ஒட்ட கூத்தனுார் என்ற பெருமை பெற்று, தற்போது, கூத்தனுார் என, அழைக்கப்படுகிறது. இந்து சமயஅறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள, இக்கோவில் கும்பாபிஷேகம், 2003 ல், நடந்தது. அதன்பின், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், 6ம்தேதி,பாலாலயம் நடந்து, கோவில் திருப்பணிகள் துவங்கின.  நன்கொடையாளர் அளித்த, 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் முடிந்து,  ஜூலை, 1ல், மகா கும்பாபிஷேகம் என, அறிவிக்கப்பட்டது.


அதன்படி, கும்பாபிஷேகவிழா, கடந்த 24ம் தேதி அதிகாலை, 4:30 மணிக்கு,  அனுக்ஞை,  விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கின. கடந்த 27ம்தேதி முதல்கால யாகசாலை பூஜைகள் துவங்கின.தொடர்ந்து, ஏழுகால பூஜைகள் முடிந்து, இன்று (ஜூலை 1ல்) காலை 5:30 மணிக்கு எட்டாம் கால யாகசாலை பூஜை நடந்தது.காலை,  9:30 மணிக்கு கடங்கள் புறப்பட்டு, 10:00 மணிக்கு,  மூலஸ்தான கோபுரம் மற்றும் ராஜகோபுரத்தில் சிவாச்சாரியார்கள் புனிதநீர்  ஊற்ற, மகா கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.  ஏற்பாடுகளை செயல் அலுவலர்  வெங்கட கிருஷ்ணன் மற்றும் அறங்காவல் குழுவினர், கிராம மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !