உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி கோயில் அலுவலகத்தில் தீ: சிலை மோசடியை மறைக்க சதி

பழநி கோயில் அலுவலகத்தில் தீ: சிலை மோசடியை மறைக்க சதி

பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் இணை ஆணையர் அலுவலகத்தில் மின்கசிவால் தீப்பிடித்து பீரோக்கள், ஆவணங்கள் சேதம் அடைந்தன. சிலை மோசடி விசாரணையை முடக்க நடந்த சதியா என்ற சந்தேகம்
எழுந்துள்ளது.

பழநி மலை அடிவாரத்தில் கோயில் நிர்வாக அலுவலகம் செயல்படுகிறது. இங்குள்ள இணை ஆணையர் அலுவலகத்தில் நேற்று மதியம் 3:00 மணிக்கு தீப்பிடித்தது. தீயணைப்புதுறையினர், கோயில்  பணியாளர்கள் இணைந்து தீயை அணைத்தனர். இதில் நான்கு ‘ஏசி’க்கள் எரிந்தன. நாற்காலிகள், நான்கு பீரோக்கள், ஆவணங்கள், சேதம் அடைந்துள்ளன. இக்கோயிலில் உற்ஸவர் சிலை மோசடி குறித்து விசாரணை நடக்கும் நிலையில் இது விபத்தா, ஆவணங்களை அழிக்க நடந்த சதியா என சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இணை ஆணையர் செல்வராஜ் கூறுகையில், ‘‘ஏசி’யில் மின்கசிவால் விபத்து ஏற்பட்டது. பீரோவில் டெண்டர் தொடர்பான ரசீதுகள் இருந்தன. மற்ற ஆவணங்கள் எரியவில்லை’’ என்றார்.

இதுகுறித்து இந்துமக்கள் கட்சி மாநில பொதுச்செயலர் ராமரவிக்குமார் கூறியதாவது: சிலை கடத்தல் தடுப்புப் பிரிவில் இருந்து ஐ.ஜி., பொன்மாணிக்க வேலை மாற்றக் கூடாது. பழநி சிலைமோசடி குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். சிலை மோசடி விசாரணை நடக்கும்போது, முக்கிய ஆவணங்கள் எரிந்துவிட்டதாக கூறுகின்றனர். இது விபத்தா அல்லது சதியா என சந்தேகம் உள்ளது, என்றார். இது சதியாக இருக்கலாம் என இந்து முன்னணி மாவட்ட பொதுச்செயலர் ஜெகன், போலீசில் புகார் அளித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !