சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ராஜகோபுரம் கட்டும் பணி மும்முரம்
திருச்சி: திருச்சி, சமயபுரம் மாரியம்மன் கோவிலில், ராஜகோபுரம் கட்டும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. சக்தி வழிபாட்டு தலங்களில் முதன்மையாக கருதப்படும் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு, தமிழகம் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். கடந்த, 2010ல், கோவில் திருப்பணி தொடங்கியது. கோவில் கோபுரங்கள் மற்றும் பக்தர்களுக்கான முடி காணிக்கை மண்டபம், தங்கும் விடுதி உள்பட பல்வேறு கட்டடங்கள் கட்டப்பட்டு, கடந்த ஆண்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. கோவிலின் கிழக்கு பகுதியில், ஏழு நிலைகளுடன், 103 அடி உயரத்தில் அமைய உள்ள ராஜகோபுரம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. அதில், மூன்று நிலைகள் கட்டுமானப் பணி முடிந்து, நான்காவது நிலை கோபுரம் கட்டும் பணி தற்போது நடக்கிறது. நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரை சேர்ந்த உபயதாரர்கள் பொன்னர், சங்கர் ஆகியோர் ராஜகோபுரம் கட்டுமானப் பணியை செய்து வருகின்றனர். ராஜகோபுரத்தில், 30 அடி உயர கல் பிரகாரம், அம்மன், சிவன், முருகன், விநாயகர் உள்ளிட்ட 525 பொம்மைகளும் அமைய உள்ளன. முதல்நிலை கோபுரம் பதிமூன்றரை அடி உயரத்திலும், இரண்டாம் நிலை கோபுரம் பனிரெண்டரை அடி உயரத்திலும், மூன்றாம் நிலை கோபுரம் பத்தரை அடி உயரத்திலும் அமைந்துள்ளது. இன்னும் எட்டு மாதத்துக்குள் ராஜகோபுரம் கட்டும் பணி நிறைவடையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.