திருவிடந்தை கோவிலில் இன்று கும்பாபிஷேகம்
மாமல்லபுரம்: நித்ய கல்யாண பெருமாள் கோவிலில், இன்று, மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.மாமல்லபுரம் அடுத்த, திருவிடந்தை, நித்ய கல்யாண பெருமாள் கோவில், பக்தர்களிடம் பிரசித்தி பெற்றது. 108 வைணவ கோவில்களில், 62ம் கோவில் மற்றும் திருமண, ராகு, கேது தோஷபரிகார கோவில் என, விளங்குகிறது. கோவிலில், ஆதிவராக பெருமாள், அகிலவல்லி தாயாருடன், மூலவர்; நித்ய கல்யாண பெருமாள், கோமளவல்லி தாயாருடன் உற்சவர் என வீற்று, பக்தர்களுக்கு அருள்புரிகின்றனர். தமிழக இந்து சமய அறநிலைய, மத்திய தொல்லியல் ஆகிய துறைகள் நிர்வகிக்கும் இக்கோவிலில், மூன்றாண்டுகளாக, திருப்பணிகள் மேற்கொண்டு, புதிய கொடிமரம் அமைத்து பணி நிறைவடைந்தது. தொடர்ந்து, மகா கும்பாபிஷேகத்திற்காக, நேற்று முன்தினம் காலை, பிரதிஷ்டை, யாகசாலை வாஸ்து சாந்தி, அஷ்டபந்தன சாற்றுதல் உள்ளிட்ட வழிபாடு துவங்கப்பட்டது. இன்று காலை, 9:00 - 10:30 மணிக்குள், மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.