உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் திருப்பணி துவங்கியது

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் திருப்பணி துவங்கியது

விருத்தாசலம்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் 4 கோடியே 18 லட்சத்து 14 ஆயிரம் ரூபாய்க்கான புனரமைப்பு பணிகள், பாலாலயம் நிகழ்ச்சியுடன் நேற்று துவங்கியது. விருத்தாசலம், விருத்தகிரீஸ்வரர் கோவில் ஐந்து கோபுரம், ஐந்து கொடிமரம், ஐந்து பிரகாரம், ஐந்து தேர், ஐந்து நந்தி உள்ளிட்ட ஏராளமான ஐந்தின் சிறப்புகளைக் கொண்டது. இந்த கோவில் கும்பாபிஷேகம், கடந்த 2002ல் நடந்தது. அதையடுத்து, 12 ஆண்டுகளுக்கு ஓருமுறை கும்பாபிஷேகம் செய்யும் வழக்கம் மற்றும் கோபுரங்களில் செடி, கொடிகள் முளைத்து சிற்பங்கள் சேதமடையத் துவங்கியதாலும், ரசாயணங்கள் மூலம் செடிகளை அழித்து, கடந்த 2015ல் 18.5 லட்சத்தில் மேற்கு கோபுரம் புனரமைக்கப்பட்டது. அப்போது, கோவிலை பார்வையிட வந்த தொல்லியல் துறை அதிகாரிகள், பழமை மாறாமல் புனரமைக்க வேண்டும். இதற்காக, தொல்லியல்துறை வழிகாட்டல் படிதான் புனரமைப்பு பணிகள் துவங்க வேண்டும் என உத்தரவிட்டது. இதையடுத்து, புனரமைப்பு பணிகள் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், கடந்தாண்டு 4 கோடியே 18 லட்சத்து 14 ஆயிரம் ரூபாயில் புனரமைக்க, தமிழக அரசு அனுமதி வழங்கியது. இந்து சமய அறநிலையத்துறை பொறியாளர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அளவீடு மற்றும் மதிப்பீடு செய்து, தொல்லியல் துறை மற்றும் ஐ கோர்ட் கமிட்டியிடம் அனுமதி பெற்றனர். அதன்படி பணிகள் பிரிக்கப்பட்டு, உபயதாரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதையடுத்து, பாலாலயம் நேற்று முன்தினம் மாலை 4:00 மணியளவில் விக்னஷே்வரா பூஜை, முதல் கால பூஜையுடன் துவங்கியது. நேற்று காலை 5:45 மணயளவில் இரண்டாம் கால யாக சாலை பூஜையும், 8:15 மணியளவில் மஹாபூர்ணாஹூதியும், 8:30 மணியளவில் பாலஸ்தாபன படத்திற்கு மஹா அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதில், விழுப்புரம் இணை ஆணையர் செந்தில்வேலவன், மயிலாடுதுறை துணை ஆணையர் ஜூவானந்தம், கலைச்செல்வன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ, குழந்தை தமிழரசன், செயல் அலுவலர் ராஜாசரவணகுமார், முன்னாள் சேர்மன் சுந்தரராஜன், அரசு வழக்கறிஞர் விஜயகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

அதில், 89 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கான பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஒரு கோடியே 59 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய்க்கான 20 உபயதாரர்களுக்கான 13 பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஒரு கோடியே 69 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கான விருத்தாம்பிகை அம்மன் சன்னதி, விருத்தகிரீஸ்வரர் சன்னதி உட்பட 16 பணிகளுக்கான உபயதாரர்கள் தேவைப்படுகின்றனர். ஆன்மிகப் பணிகளில் ஆர்வமுடையவர்கள், கோவில் புனரமைப்பு பணிகளை மேற்கொண்டு சுவாமியின் அருளை வேண்டுகிறோம் என இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !