சவுண்டம்மன் கோவிலில் டைல்ஸ் பதித்த தம்பதியர்
குமாரபாளையம்: குமாரபாளையம், சவுண்டம்மன் கோவிலில், பித்தளைத் தகடு கவசம், டைல்ஸ் பதித்து, அமெரிக்க தம்பதியர் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றியுள்ளனர். குமாரபாளையம், பிரதான சாலையில், சவுண்டம்மன் கோவில் உள்ளது. தை மாதம், திருவிழா நடப்பது வழக்கம். விஜயநகர காலனியைச் சேர்ந்த தம்பதியர் சண்முகசுந்தரம், சுப்புலட்சுமி ஆகியோரின் மகள் உமா மகேஸ்வரி, அமெரிக்கா, நார்த் கரோலினா பகுதியில், கணவர் ரகுநாத், இரு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவர், தன் வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக, 25 ஆயிரம் ரூபாய் செலவில், கோவிலின் கர்ப்பகிரக சுவர் முழுவதும் டைல்ஸ் பதித்துள்ளார். மேலும், 65 ஆயிரம் ரூபாய் செலவில், கர்ப்பக்கிரக நுழைவுப்பகுதி முழுவதும், மகாலட்சுமி உருவத்துடன், பூக்கள் வேலைப்பாடு அமைந்த பித்தளை தகடுகளாலான கவசங்களை பதித்துள்ளார். புதிய கவசத்திற்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. பக்தர்கள் அனைவரும் ரசித்து, அம்மனை வணங்கினர்.