உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரத்தில் ஆக்கிரமிப்பு: பக்தர்கள் அவதி

ராமேஸ்வரத்தில் ஆக்கிரமிப்பு: பக்தர்கள் அவதி

ராமேஸ்வரம், ராமேஸ்வரத்தில் ஆக்கிரமிப்புகளால் ரோடு குறுகியதால் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் நடமாட சிரமப்படுகின்றனர். இதனால் வாகன விபத்து அதிகரித்துள்ளது. ராமேஸ்வரம் நகராட்சியில் ராமநாதசுவாமி கோயில் ரதவீதி, சன்னதி தெரு, கெந்தமாதன  பர்வதம் பகுதியில் 8 கி.மீ., மாநில நெடுஞ்சாலையும், ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட் முதல் தனுஷ்கோடி அரிச்சல்முனை வரை தேசிய நெடுஞ்சாலையாகவும் உள்ளது. தேசிய, மாநில, நகராட்சி சாலை என பாரபட்சமின்றி கடைக்காரர்கள் ஆக்கிரமித்து, போக்குவரத்து  நெரிசல் ஏற்படுத்தியுள்ளனர்.


வாகன விபத்து: பஸ் ஸ்டாண்ட், திட்டகுடி, வர்த்தகன் தெரு, என்.எஸ்.கே.வீதி., வேர்க்கோடு வரை உள்ள தேசிய நெடுஞ்சாலை இருபுறமும் கடைக்காரர்கள் பந்தல் அமைத்தும், தள்ளுவண்டியை நிரந்தரமாக நிறுத்தியும், ஓட்டல் உரிமையாளர்கள் அடுப்புகளை  நடைபாதையில் வைத்து சாலை ஓரத்தை ஆக்கிரமித்துள்ளனர். நடைபாதையில் நடந்து செல்ல வழியின்றி மக்கள் சாலை ஓரத்தில் நடக்க வேண்டிய அவலம் உள்ளதால் மக்கள் விபத்தில் சிக்கி காயம் அடைகின்றனர். கண்துடைப்புக்காக ஆண்டுக்கு ஒருமுறை  ஆக்கிரமிப்புகளை அகற்றுகின்றனர். பின்னர் அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் விடுவதால்,ஓரிரு தினங்களில் மீண்டும் ஆக்கிரமித்து, போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி விடுகின்றனர்.


கார், ஆட்டோ ஆக்கிரமிப்பு: நடுத்தெரு, நகைக்கடை பஜார், மார்க்கெட் தெரு, புதுத்தெரு, சித்தி விநாயகர் கோயில் தெருவில் உள்ள லாட்ஜ்களில் கார் பார்க்கிங் வசதி இல்லாததால், லாட்ஜில் தங்குபவர்கள் வாகனங்களை நகராட்சி சாலையின் இருபுறமும் நிறுத்தி  விடுகின்றனர். மேலும் இங்குள்ள ஆட்டோ ஸ்டாண்ட், காய்கறி கடைகள் சாலையை ஆக்கிரமித்துள்ளதால், இப்பகுதியில் சைக்கிளில் கூட செல்ல முடியாத அளவுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இவ்வழியாக கோயிலுக்கு நடந்து செல்லும் பக்தர்கள் பெரும்  சிரமத்தில் கடந்து செல்கின்றனர். பள்ளி வாகனங்கள் பலமுறை போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொள்வதால் மாணவர்கள் பலநிமிடங்கள் காத்து கிடந்து பரிதவிக்கின்றனர்.


பக்தர்கள் அவதி: கோயில் ரதவீதி, சன்னதி தெருவில் பெஞ்சுகளை வைத்து நடைபாதை, சாலை ஓரத்தை ஆக்கிரமித்து வியாபாரம் செய்கின்றனர். பக்தர்கள் நடந்து செல்ல சிரமம் ஏற்படுகிறது. வருவாய்துறை, நகராட்சி நிர்வாகம், போலீசார், தேசிய, மாநில  நெடுஞ்சாலைதுறையினர் ஒருங்கிணைந்து செயல்பட்டு, நகராட்சியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாலையோரத்தில் நிறுத்தும் வாகனத்திற்கு அபராதம் விதித்து தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட வேண்டும்.


ராமேஸ்வரம் நகராட்சி ஆணையர் ஏ.வீரமுத்துகுமார் கூறுகையில்: நகராட்சியில் நடக்கும் விபத்துகளை தடுக்கவும், பக்தருக்கு இடையூறாக உள்ள சாலை, நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றவும், அக்னி தீர்த்த கடற்கரையில் கால்நடை வளர்ப்போர் ஆடு, மாடுகளை  பாதுகாக்க தவறினால், அவைகளை பறிமுதல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்ட கலெக்டர், பிறதுறை அதிகாரிகளுடன் ஆலோசித்து ஆக்கிரமிப்பு அகற்றப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !