/
கோயில்கள் செய்திகள் / ராணுவத்தின் நடவடிக்கையால் உயிர் பிழைத்தோம் : மானசரோவர் சென்று திரும்பியவர்கள் உருக்கம்
ராணுவத்தின் நடவடிக்கையால் உயிர் பிழைத்தோம் : மானசரோவர் சென்று திரும்பியவர்கள் உருக்கம்
ADDED :2645 days ago
சேலம்: இந்திய ராணுவத்தின், மெச்சத்தகுந்த நடவடிக்கையால் உயிர் பிழைத்தோம் என, கைலாஷ் மானசரோவருக்கு யாத்திரை சென்று திரும்பியவர்கள், சேலத்தில் தெரிவித்தனர்.
இமயமலையில் உள்ள, புனித தலமான கைலாஷ் மானசரோவருக்கு, தமிழகம், கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்து, 10 நாட்களுக்கு முன், 1,500க்கும் மேற்பட்டோர் சென்றனர். அவர்கள் தரிசனம் முடிந்து திரும்பிய போது, நேபாளத்தில் பலத்த மழை பெய்தது. இதனால், அவர்கள் ராணுவ முகாமில் தங்க வைக்கப்பட்டனர். அங்கிருந்து, வெளியே வரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டது. யாத்திரை சென்றவர்களுக்கு, வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில், உணவு மற்றும் மருத்துவ வசதி செய்யப்பட்டது. பின்னர், மழை விட்ட பிறகு, அங்கிருந்தவர்கள் பாதுகாப்பாக, சொந்த ஊருக்கு திரும்பி அனுப்பப்பட்டனர்.
அதன்படி, சேலம் பட்டைக்கோவில் பகுதியிலிருந்து சென்றிருந்த, 57 பேரும், நேற்று பத்திரமாக வந்து சேர்ந்தனர். யாத்திரை சென்று திரும்பியவர்கள் கூறியதாவது: பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவ வாய்ப்பு இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, கடுமையான சோதனைக்கு பிறகே, பக்தர்கள் தரிசனத்திற்கு அனுப்பப்பட்டனர். ஒவ்வொரு, 100 மீட்டருக்கு ஒரு ராணுவ வீரர், கொட்டும் பனியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுஇருந்தனர். திரும்பி வரும் போது, 3ம் தேதி இரவு கடுமையான மழை பெய்தது. ராணுவ முகாமில், 5ம் தேதி வரை தங்கியிருந்து, அன்று இரவு, ரயில் மூலமாக புறப்பட்டு, இன்று மதியம் சேலம் வந்து சேர்ந்தோம்.இந்திய ராணுவ வீரர்களின் பணி மிகவும் சிறப்பானது. அவர்களது மெச்சத்தகுந்த பணியால் உயிர்பிழைத்தோம். எவ்விதமான பாரபட்சமும் இல்லாமல், மத்திய அரசு உதவி செய்தது.அங்கு பெய்த மழையை பார்த்த போது, குடும்பத்தினரை சந்திக்க முடியுமா என்ற அச்சம் ஏற்பட்டது. ராணுவ வீரர்கள் இல்லாவிட்டால், நிச்சயம் எங்களால் திரும்பி வந்திருக்க முடியாது. தற்போது குடும்பத்தினரை சந்தித்தது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.