திரவுபதி கோவிலில் தீ மிதி விழா விமரிசை
ஊத்துக்கோட்டை: திரவுபதி அம்மன் கோவிலில் நடந்த தீ மிதி திருவிழாவில், 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்புக் கட்டி பயபக்தியுடன் தீ மிதித்தனர்.ஊத்துக்கோட்டை அடுத்த, போந்தவாக்கம் கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவில், சிதிலமடைந்து காணப்பட்டதால், பக்தர்கள் பங்களிப்புடன் சமீபத்தில் கும்பாபிஷேகம் நடந்தது.கும்பாபிஷேகம் முடிந்த நிலையில், முதலாம் ஆண்டு, தீ மிதி திருவிழா, 29ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. ஒவ்வொரு நாளும், மாடு பிடி சண்டை, பக்காசூரன் வதம், திருக்கல்யாணம், துரியோதனன் படுகளம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவின் முக்கிய நாளான நேற்று முன்தினம், இரவு 7:30 மணிக்கு, தீ மிதி திருவிழா நடந்தது. இதில், போந்தவாக்கம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து, 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்புக் கட்டி தீ மிதித்தனர்.இதைத் தொடர்ந்து, திரவுபதி அம்மன் சிறப்பு அலங்காரத்தில், வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் அம்மனை வழிபட்டனர்.