27ம் தேதி சந்திரகிரகணம் : கூடலழகர் கோயில் நடைதிறப்பு மாற்றம்
மதுரை: மதுரை, கூடலழகர் கோயில், பெரியாழ்வாரால் பல்லாண்டு பாடப்பெற்றதும், திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டதுமான 108 திவ்ய தேசங்களில் 47 வது திவ்ய தேசமாகும். இக்கோயிலில் வருகிற 27.7.2018ம் அன்று இரவு (11.54 மணி – 3.49 வரை) சந்திரகிரகணம் நிகழ உள்ளதால் முற்பகல் பூஜைகள் எப்போதும்போல் வழக்கமாக நடைபெறும். அன்றைய தினம் மாலை நேர பூஜைகளில் 4.00 மணிக்கு திறக்க வேண்டிய நடைதிறப்பிற்கு பதிலாக 3.00 மணிக்கு திறக்கப்பட்டு, நித்யபூஜைகள் நடைபெறும். அதனைத் தொடர்ந்து சயன உற்சவ முப்பழசேவையும் அர்த்தசாம பூஜையும் முடிக்கப்பெற்று இரவு 6.30 மணியளவில் கோயில் நடை சாத்தப்படவுள்ளது. சந்திரகிரகணம் முடிந்து மறுநாள் (28.7.2018) எப்போதும்போல் அதிகாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, பரிகார பூஜைகள் முடித்து விஸ்வரூப தரிசனம் முதல் வழக்கம்போல் பூஜைகள் நடைபெறும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளனர்.