திருநங்கைகள் நடத்திய சமயபுரம் மாரியம்மன் திருவிழா
ADDED :2668 days ago
குமாரபாளையம்: நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் உள்ள மேற்கு காலனி பகுதியில், திருநங்கைகள் சார்பில், சமயபுரம் மாரியம்மன் திருவிழா நடத்தப்பட்டது. கடந்த, 20ல், கணபதி ஹோமத்துடன், திருவிழா கம்பம் நடும் விழா நடந்தது. நேற்றுமுன்தினம் இரவு, காவிரியாற்றிலிருந்து ஜண்டை மேளதாளங்கள் முழங்க, திருநங்கைகள் பலர் நவசக்தி அம்மன், காளியம்மன் வேடங்கள் அணிந்தும், பூங்கரகங்கள், அக்னி சட்டிகள் எடுத்தவாறும், சேலம் மெயின் ரோடு, பள்ளிபாளையம் மெயின் ரோடு வழியாக தீர்த்தக்குட ஊர்வலம் சென்றனர். நேற்று மாவிளக்கு ஊர்வலம் நடத்தப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது. பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் கூழ் வழங்கப்பட்டது.