வீரஅழகர் கோவில் பிரம்மோற்சவ விழாவில் தீ: பூஜை பொருட்கள் கருகின
மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வீரஅழகர் கோவில் பிரம்மோற்சவ விழா மண்டகப்படியில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் சுவாமி சிலை, பூஜை பொருட்கள் கருகின. இக்கோவிலில் ஆடி மாத பிரம்மோற்சவ விழா, 19ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் மாலை கோவிலில் வீர அழகருக்கு திருக்கல்யாணம் நடந்தது. நேற்று காலை, 10:00 மணிக்கு குண்டுராயர் தெருவில் சுந்தரபுரம் கடைவீதி மண்டகப்படிக்கு வீர அழகர் எழுந்தருளினார். அங்கிருந்து நேற்று மாலை வீதி உலாவுக்கு திட்டமிடப்பட்டிருந்தது. மதியம், 2:20 மணிக்கு மண்டகப்படி பந்தலில் தீப்பற்றியது. தீயணைப்பு துறையினர் வருவதற்குள் பந்தல் முழுவதும் எரிந்தது. இதில் வீரஅழகர் உற்சவர் சிலை, அலங்கார பொருட்கள், குத்துவிளக்குகள், பூஜைப்பெட்டிகள் எரிந்தன. ஐம்பொன் உற்சவர் சிலை ஆறு ஆண்டுகளுக்கு முன் செய்யப்பட்டது. சிலை, பூஜை பொருட்கள் கருகியது பக்தர்களுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது. விபத்தையடுத்து, பரிகார பூஜை செய்ய அர்ச்சகர்கள் திட்டமிட்டுள்ளனர்.