உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வடமதுரை சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் தேரோட்டம்

வடமதுரை சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் தேரோட்டம்

வடமதுரை: வடமதுரை சவுந்தரராஜ பெருமாள் கோயில் ஆடித்திருவிழாவில் நேற்று காலை தேரோட்டம் நடந்தது. கடந்த ஜூலை 19ல் கொடியேற்றத்துடன் துவங்கிய 13 நாள் திருவிழாவில் நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு, மண்டகப்படிதாரர் சிறப்பு வழிபாடு, கலை நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. கடந்த ஜூலை 25 இரவு
சவுந்தரவள்ளி தாயார் சன்னதியில் திருக்கல்யாணம் நடந்தது. திருவிழாவின் 9வது நாள் மாலை தேரோட்டம் நடப்பது வழக்கம். நேற்று சந்திர கிரகணம் ஏற்பட்டதால் மாலை நேரத்திற்கு பதிலாக காலையில் தேரோட்டம் நடத்த முடிவு செயதனர்.

முன்னதாக மதுரை அழகர்மலை தீர்த்தத்தால் சுவாமிகளுக்கு அபிஷேகமும், சுதர்ஷன யாக பூஜைகளும் நடந்தன. பின்னர் சன்னதியில் இருந்து ஊர் பிரமுகர்கள் அழைத்து வர முத்தங்கி அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூமாதேவியுடன் சவுந்தரராஜப்பெருமாள் தேரில் எழுந்தருளினார்.  காலை 10:50 மணிக்கு பக்தர்கள் கரகோஷத்துடன் வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் துவங்கியது. திண்டுக்கல் ரோடு, மேற்கு, வடக்கு ரத வீதிகள், ஒட்டன்சத்திரம் ரோடு வழியே வலம் வந்த தேர் மதியம் 1:20 மணிக்கு தேர் நிலைக்கு திரும்ப வந்தது. பின்னர் சுவாமி தேர்க்கால் பார்க்கும் நிகழ்ச்சி முடிந்து சந்திர கிரகணம் காரணமாக நேற்று மாலையே கோயில் நடை அடைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !