ஆடி வெள்ளியை முன்னிட்டு கிருஷ்ணகிரி அம்மன் கோவில்களில் விழாக்கோலம்
ஆடி வெள்ளியை முன்னிட்டு அம்மன் கோவில்களில் விழாக்கோலம்
கிருஷ்ணகிரி: ஆடி இரண்டாம் வெள்ளியை முன்னிட்டு, கிருஷ்ணகிரி மாரியம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. சென்னை சாலையில் உள்ள, பெரிய மாரியம்மன் கோவிலில், காமாட்சி அம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ராசுவீதி துளுக்காணி மாரியம்மன் கோவிலில், காய்கறி அலங்காரத்திலும், ஜோதி விநாயகர் கோவில் தெருவில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் காய்கறி அலங்காரத்திலும், அக்ரஹாரம் பவானி அம்மன் கோவிலில் சிறப்பு அலங்காரத்திலும் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பர்கூர் போலீஸ் குடியிருப்பில் உள்ள அங்காள பரமேஸ்வரி, நாகலம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு விநாயகருக்கு பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி, அம்மனுக்கு கூழ் ஊற்றுதல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று மதியம், பால்குட ஊர்வலம், பெண்கள் பூக்கரகம் எடுத்தல் நிகழ்ச்சி நடந்தது. இதில், ஏராளமான பெண்கள் பால் குடம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். இன்று அம்மனுக்கு மாவிளக்கு எடுத்தல் மற்றும் பொங்கல் வைத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்க உள்ளது.