திருத்தணி முருகன் கோவிலுக்கு காவடியுடன் பக்தர்கள் நடைபயணம்
கம்பைநல்லூர்: கம்பைநல்லூர் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்கள், காவடியுடன் திருத்தணி முருகன் கோவிலுக்கு நடைபயணம் மேற்கொண்டனர். திருத்தணி முருகன் கோவிலில், கார்த்திகை விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து, ஏராளமான பக்தர்கள், திருத்தணிக்கு வருகின்றனர். தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லூர் அடுத்த, இருமத்தூர், கொன்றம்பட்டி, உச்சம்பட்டி, மோட்டூர் உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த, 300க்கும் மேற்பட்ட பக்தர்கள், 30 நாட்கள் விரதமிருந்து, நேற்று காலை, காவடியுடன், திருத்தணிக்கு நடைபயணம் மேற்கொண்டனர். திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர், வேலூர், ஆற்காடு வழியாக, 250 கி.மீ., தூரத்திற்கு, ஐந்து நாட்கள் நடைபயணமாக, திருத்தணிக்கு செல்கின்றனர். கடந்த, 24 ஆண்டுகளாக திருத்தணிக்கு நடை பயணமாக சென்று, முருகப் பெருமானை வழிபடுவதாகவும், இதனால், தங்கள் குறைகள் நிவர்த்தி ஆவதாகவும், பக்தர்கள் தெரிவித்தனர்.