ஜாக்கிகள் மூலம் 4 அடிகள் உயர்ந்த குருசடை கோபுரம்
மதுரை, மதுரை பைபாஸ் ரோடு ராம்நகர் புனித தோமஸ் ஆர்த்தோடெக்ஸ் ஆலய குருசடை கோபுரம் ஜாக்கிகள் தொழில்நுட்பத்தில் தரையில் இருந்து நான்கு அடி உயரம் உயர்த்தப்பட்டது.இக்கோபுரம், பைபாஸ் ரோட்டை விட இரண்டு அடி பள்ளமாக இருந்தது. பிரார்த்தனை செய்வோர் பள்ளத்தில் நிற்கும் நிலை இருந்தது. பாதிரியார் லினு லுாகோஸ், அறக்கட்டளை நிர்வாகிகள் உம்மன் டி அலெக்ஸ், பி.ஜெ.ஜான், டி.ஏ.பீட்டர் ஆகியோர் ஜாக்கிகள் தொழில்நுட்பத்தில் முப்பதாண்டு பழமையான 30 அடி உயரம், நான்கு டன் எடை கொண்ட குருசடை கோபுரத்தை தரையில் இருந்து நான்கு அடி உயர்த்த முடிவு செய்தனர். இதற்காக சென்னை தனியார் கட்டுமான நிறுவனத்தை அணுகினர். ஜூலை 23 வல்லுனர் குழுவினர் கோபுர தரைத்தளத்தை அறுவை இயந்திரம் மூலம் அறுத்தனர். கீழே தரைக்கும், கோபுரத்தின் அடிபாகத்திற்கும் இடையே 30 ஜாக்கிகளை வைத்து நான்கு அடி உயரத்துக்கு துாக்கி நிறுத்தினர். தரைத்தளம் - கோபுரத்தின் அடிபாகத்திற்கு இடையே செங்கல் கற்களை அடுக்கி சிமென்ட் கலவையில் சுவர் எழுப்பினர். ஒரு வாரம் கழித்து ஜாக்கிகள் அகற்றப்படும். பின் வழக்கம் போல் உயரமான குருசடை கோபுரம் முன் பிரார்த்தனை செய்யலாம்.