விருத்தாசலம் கோவிலில் ஆடி கிருத்திகை கோலாகலம்: பக்தர்கள் நேர்த்திக்கடன்
விருத்தாசலம்: ஆடி கிருத்திகையொட்டி, விருத்தாசலம் கோவில்களுக்கு பால்குடம், காவடி சுமந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் உள்ள வள்ளி தெய்வானை சமேத சண்முக சுப்ரமணியர் சுவாமி, 28 ஆகம சன்னதியில் உள்ள குமரேச சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. மாலை சந்தனக்காப்பு அலங்காரத்தில் சுவாமிகள் அருள்பாலித்தனர்.
மணவாளநல்லுார்: கொளஞ்சியப்பர் கோவிலில் சித்தி விநாயகர், சுவாமிக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், தேன், பஞ்சாமிர்தம், திரவிய பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. விநாயகர் வெள்ளிக் கவசத்திலும், கொளஞ்சியப்பர் தங்கமுலாம் பூசிய கிரீடத்திலும் அருள்பாலித்தனர். இரவு சுவாமி வீதியுலா நடந்தது. கருவேப்பிலங்குறிச்சி சாலை, வேடப்பர் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. மேலும், மணிமுக்தாற்றிலிருந்து பக்தர்கள் பால்குடம், இளநீர் காவடி, தாள் காவடி சுமந்து ஊர்வலமாக சென்று, நேர்த்திக்கடன் செலுத்தினர். கொளஞ்சியப்பர் கோவிலுக்கு நெய்வேலியை சேர்ந்த பக்தர் ஒருவர், மரத்தினால் செய்த ஊஞ்சல் தொட்டி கொடுத்து, நேர்த்திக்கடன் செலுத்தினார்.
நடுவீரப்பட்டு: பண்ருட்டி அடுத்த புலவனுார் பாலமுருகன் கோவிலில் ஆடி கிருத்திகை விழா கடந்த 27 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. கிருத்திகை தினமான நேற்று காலை பெண்ணை ஆற்றிலிருந்து காவடிகளை அபிஷேகம் செய்து பக்தர்கள் வீதி உலாவாக எடுத்து வந்தனர். பகல் 1:00 மணிக்கு செடல் போட்டு மரத்தில் தொங்கும் காவடி பூஜை நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு மிளகாய்பொடி, பால், பன்னீர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடந்தது. பக்தர்கள் முதுகில் அலகு குத்தி தேர் இழுத்து நேர்த்தி கடன் செலுத்தினர். இரவு சுவாமி வீதி உலா நடந்தது. இன்று இடும்பன் பூஜை நடக்கிறது.