திருக்கோஷ்டியூர் ஆடிப்பூர உற்ஸவம் துவக்கம்
திருப்புத்துார்:திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில் திருவாடிப்பூர உற்ஸவம் கொடியேற்றத்துடன் துவங்கியது.இக்கோயில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகியும், பாண்டிய தேச பதினெட்டில் ஒன்றாயும், ஆழ்வார்கள் ஐவரால் பாடப்பெற்ற சிறப்பை பெற்றது.
இக்கோயிலில் ஆடி மாதத்தில் 11 நாட்கள் திருவாடிப்பூர உற்ஸவம் நடைபெறும். நேற்று காலை 7:10 மணிக்கு பெருமாள் மற்றும் ஆண்டாள் கல்யாண மண்டபம் எழுந்தருளினார். பின்னர் கொடிமரம், படத்திற்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து காலை 11:15 மணி அளவில் கொடியேற்றம் நடந்தது. பின்னர் பட்டாச்சார்யர்களால் ஆபரணதேவதைகள் உற்ஸவத்திற்கு அழைத்தலும், கொடிமரத்திற்கு உற்ஸவர்களுக்கு சிறப்பு அபிேஷகம் நடந்த சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தலும் நடந்தது. தினசரி காலை 9:00 மணிக்கு சுவாமி புறப்பாடும், இரவு வாகனங்களில் ஆண்டாள்,பெருமாள் திருவீதி உலாவும் நடைபெறும். ஆக.,13ல் தேரோட்டமும், ஆக.,14ல் தீர்த்தவாரியும் நடைபெறும். ஏற்பாட்டினை சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்தினர் செய்கின்றனர்.