பழங்கால கோவில்களின் நிலங்கள் மாயம்!அறநிலையத்துறை மீட்க எதிர்பார்ப்பு
பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே பழமையான கோவில்களுக்கு சொந்தமான, 136 ஏக்கர் நிலங்களை மீட்க வேண்டும் என, அறநிலையத்துறை அதிகாரிகளிடம் வலியுறுத்தப்பட்டது. பொள்ளாச்சி அருகே சிஞ்சுவாடியில், ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்துக்கு முன் பாளையக்காரர்கள் ஆட்சி நடந்துள்ளது. அதில், ஜம்பநாயக்கர் எனும் பாளையக்காரர் ஆட்சிக்காலத்தில் வரதராஜப்பெருமாள் கோவில் கட்டப்பட்டுள்ளது.இந்து அறநிலையத்துறையின், ஒரு கால பூஜை திட்டத்தில், சேர்க்கப்பட்டுள்ள இக்கோவில் போதிய பராமரிப்பின்றி, மூலவர் சிலைகள், சன்னதியில் இல்லாமல் உட்பிரகாரத்தில் வைக்கப்பட்டுள்ளன. கோவிலை கோவை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் விமலா, பொள்ளாச்சி ஆய்வாளர் மல்லிகா ஆய்வு செய்தனர். அப்போது, பாளையக்காரர் வாரிசுகள் மற்றும் மக்கள், பாளையக்காரர் ஜம்பநாயக்கர் காலத்தில் கட்டப்பட்ட, வரதராஜப்பெருமாள், மாரியம்மன், சிறு துாண்டியம்மன், மாலப்பட்டி பெருமாள் மற்றும் விநாயகர் கோவில்களுக்கும் நிலங்கள் வழங்கப்பட்டன.
சிஞ்சுவாடி, கோலார்பட்டியில் மட்டும் ஆக்கிரமிப்பாளர் வசம் உள்ள, 136 ஏக்கர் நிலங்களை மீட்டு, கோவில் பெயருக்கு பட்டா மாறுதல் செய்து, அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும். நிலங்களை குத்தகைக்கு, பொது ஏலத்தில் விட்டு கிடைக்கும் வருவாயில், கோவிலை புனரமைத்து கும்பாபிேஷகம் நடத்த வேண்டும், என வலியுறுத்தினர். அதிகாரிகள், வரதராஜப் பெருமாள் கோவில் திருப்பணி செய்வதற்காக, ஒரு லட்சம் ரூபாய் நிதி ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆவணங்கள் சரிபார்த்து, ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.