தென்னங்கன்று குழியில் பிரம்மா சிலை கண்டெடுப்பு
தஞ்சாவூர் : தஞ்சை அருகே, தென்னங்கன்று வைக்க குழி தோண்டி போது, 5 அடி உயரமுள்ள பிரம்மா கற்சிலை கண்டெக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அடுத்த வீரசிங்கம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ராஜராஜன், 33. இவருக்கு சொந்தமான தென்னப்தோப்பில், புதிதாக தென்னங்கன்று நடும் பணிகள் நடந்து வருகிறது.இதற்காக, நேற்று முன்தினம் இரவு, பொக்லைன் மூலம் குழி தோண்டும் பணி நடந்த போது, நிலத்தில், ஒரு சிலை புதைந்து கிடப்பது தெரிய வந்தது.குழியை அகலப்படுத்தி, சிலையை வெளியே எடுத்த போது, நான்கு முகங்களுடன், 5 அடி உயரத்தில் கருங்கலால் வடிமைக்கப்பட்ட பிரம்மா சிலை என்பது தெரிந்தது.உடனே, வருவாய் துறை அதிகாரிகள், போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு திரண்ட கிராம மக்கள், சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.நேற்று காலை சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள், சிலையை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.