ஆட்டையாம்பட்டி மாரியம்மன் கோவிலில் தேரோட்டம்
வீரபாண்டி: சேலம், ஆட்டையாம்பட்டி பெரிய மாரியம்மன் கோவிலில், ஆடி விழாவை முன்னிட்டு, நாளை குண்டம் இறங்குதல், தேரோட்ட நிகழ்ச்சி நடக்கிறது. ஆட்டையாம்பட்டி, பெரிய மாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா கடந்த,1ல் கம்பம் நடுதலுடன் துவங்கியது. 9ல் கொடியேற்றம் நடந்தது. தினமும் இரவு, அம்மன் பலவித சிறப்பு அலங்காரங்களில், திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இன்று காலை, கோவில் முன் குண்டம் இறங்கும் இடத்தை சுத்தம் செய்து சிறப்பு பூஜைகள் செய்யப்படவுள்ளது. இரவு சத்தாபரணத்தில், அம்மன் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட மலர் சப்பரத்தில், எழுந்தருளி வீதிஉலா வரவுள்ளார். நாளை அதிகாலை குண்டம் இறங்குதல், மதியம் தேரோட்டம் நடக்கிறது. அதற்காக தேரை துணிகள் போர்த்தி அலங்கரித்து, வட சங்கிலிகள் பூட்டி, தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது. நாளை மறுநாள் ஆடு, கோழிகளை பலியிட்டு பொங்கல் வைத்தல், மாலையில் கம்பம் ஆற்றில் விடுதல், நிகழ்ச்சிகள் நடக்கவுள்ளன. வரும், 17 இரவு வண்டி வேடிக்கை, 18ல், ஊஞ்சல் உற்சவத்துடன் ஆடித்திருவிழா நிறைவு பெறும். ஏற்பாடுகளை, கோவில் அறங்காவலர் ரகுராஜ் மற்றும் நிர்வாகிகள் செய்கின்றனர்.