உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சென்னையில் விரதம் முடிக்கும் அய்யப்ப பக்தர்கள்

சென்னையில் விரதம் முடிக்கும் அய்யப்ப பக்தர்கள்

கேரளாவில் தொடர் மழையால், சபரிமலை அய்யப்பன் கோவில் நடை மூடப்பட்டதால், சபரிமலைக்கு மாலை அணிந்த, தமிழக பக்தர்கள், இருமுடியுடன், சென்னையில் உள்ள அய்யப்பன்  கோவிலுக்கு வருகின்றனர்.கேரள மாநிலம், பத்தனம் திட்டா மாவட்டத்தில், சபரிமலை அய்யப்பன் கோவில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும், ‎மலையாள மாதத்தின், முதல் ஐந்து நாட்களில் மட்டும்,  கோவிலில் ‎பிரார்த்தனை செய்ய நடை திறக்கப்படுகிறது.

இம்மாதம், 16ம் தேதி மாலை, 5:00 முதல், 21ம் தேதி இரவு, 10:00 மணி வரை நடை திறக்கப்படும். மேலும், ஓணம் பண்டிகைக்காக, 23ம் தேதி மாலை, 5:00 முதல், 27ம் தேதி இரவு, 10:00 மணி  வரை நடை திறக்கப்படும் என, திருவிதாங்கூர் தேவஸ்தானம் போர்டு அறிவித்திருந்தது.இருமுடிசபரிமலையில் மாதாந்திர திறப்பை முன்னிட்டு, தமிழகத்தைச் சேர்ந்த அய்யப்ப பக்தர்கள், மாலை  அணிந்து, விரதம் இருந்து, இருமுடி கட்டி, சபரிமலைக்கு செல்வது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டும், சபரிமலைக்கு செல்ல, பக்தர்கள் மாலை அணிந்திருந்தனர்.இந்நிலையில், கன மழையால்,  கேரளாவில், தற்போது, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சபரிமலை பகுதியில், தொடர்ந்து கன மழை பெய்து வருவதால், பம்பை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. சபரிமலை அய்யப்பன்  கோவிலுக்குள், வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனால், சபரிமலை அய்யப்பன் கோவில் நடை சாத்தப்பட்டுள்ளது; பக்தர்கள், அடுத்த சில நாட்களுக்கு கோவிலுக்கு வர வேண்டாம் என, தேவசம் போர்டு  அறிவித்துள்ளது.இதனால், சபரிமலைக்கு மாலை அணிந்திருந்த தமிழக பக்தர்கள், செய்வது அறியாமல் தவித்தனர். பக்தர்கள், இருமுடி கட்டி, சென்னையில் உள்ள அண்ணா நகர், எம்.ஆர்.சி., நகரில்  உள்ள, அய்யப்பன் கோவில்களில், நெய் அபிஷேகம் செய்யலாம் என, அந்தந்த பகுதி குருசாமிகளும் ஆலோசனை வழங்கினர்.இதுதொடர்பாக, அய்யப்ப கோவில்களிலும் அனுமதி வழங்கப்பட்டதால்,  அய்யப்ப பக்தர்கள் இருமுடி கட்டி, சென்னையில் உள்ள அய்யப்பன் கோவில்களுக்கு செல்கின்றனர்.மடிப்பாக்கம்அதன்படி, சென்னை, எம்.ஆர்.சி., நகரில் உள்ள அய்யப்பன் கோவிலில், இருமுடியுடன்,  18 படியேறி சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள், மூலவருக்கு நெய்யபிஷேகம் செய்து, தங்கள் வேண்டுதலை நிறைவேற்றி வருகின்றனர். இதற்காக, கோவில் நிர்வாகம் சார்பில், சிறப்பு ஏற்பாடுகள்  செய்யப்பட்டுள்ளன. மடிப்பாக்கத்தில் உள்ள அய்யப்பன் கோவிலிலும், பக்தர்கள் வசதிக்காக, இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !