உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சமணர் கோவிலில் தெலுங்கு கல்வெட்டு: திருப்பூர் அருகே கண்டுபிடிப்பு

சமணர் கோவிலில் தெலுங்கு கல்வெட்டு: திருப்பூர் அருகே கண்டுபிடிப்பு

 உடுமலை:திருப்பூர் அருகே, பராமரிப்பு இல்லாமல், சிதிலமடைந்து வரும், சமணர் கோவிலில் புதிய தெலுங்கு கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது.புஞ்சை புளியம்பட்டி- அவிநாசி ரோட்டில், ஆலத்துார்  கிராமத்தில், 1,100 ஆண்டு பழமையான சமணர் கோவில் உள்ளது. இக்கோவிலில், வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையத்தினர், தெலுங்கு கல்வெட்டை கண்டுபிடித்துள்ளனர். அதன் இயக்குனர் ரவிக்குமார் கூறியதாவது :பண்டைய வட கொங்கு, 20 நாட்டு பிரிவுகளில், வடபரிசார நாட்டில் ஆலத்துார் அமைந்துள்ளது. பண்டைய வணிகர்கள் பயன்படுத்திய கொங்கு  பெருவழியில் அமைந்துள்ளதால், சமணர்கள் இங்கு குடியேறியுள்ளனர். 1,100 ஆண்டுக்கு முன்பு, வீரசங்காதப் பெரும்பள்ளி அணியாதழகியார் என்ற இக்கோவிலை கட்டியுள்ளனர்.

இன்று அமணீசர் கோவில் என்று அழைக்கப்படுகிறது. இக்கோவிலில், 10ம் நுாற்றாண்டை சேர்ந்த, மூன்று வட்டெழுத்து கல்வெட்டுக்கள், 13 மற்றும் 14ம் நுாற்றாண்டைச்சேர்ந்த மூன்று தமிழ்  கல்வெட்டுக்கள் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது, 14ம் நுாற்றாண்டை சேர்ந்த தெலுங்கு கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது. ஏழு வரிகளைக்கொண்ட கல்வெட்டில், கஸ்துரி வெங்கடாசாரி  என்பவருக்கு கோவில் திருவிழாவின் போது கொடுக்கப்பட்ட உரிமை குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. பழமையான இக்கோவில், பண்டைய வாழ்வியல், தமிழகத்திற்கும், சமணத்திற்கும், 2,500  ஆண்டுக்கு முந்தைய தொடர்புகள், பண்பாடு சார்ந்த உறவுகள் என வரலாற்றுச்சான்றுகளை கொண்டுள்ளது. இவ்வாறு ரவிக்குமார் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !